தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

(03) வீரமாமுனிவர் வரலாறு !

தோற்றம்:


வீரமாமுனிவர் 1680 –ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 8 –ஆம் நாள் இத்தாலி நாட்டில் உள்ள காத்திக்கிளியோனே என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் கொண்டால்போ பெசுகி. தாயார் எலிசபெத் அம்மையார்.  வீரமா முனிவருக்கு அவரது பெற்றோர் சூட்டிய  பெயர் கான்சுடண்டைன் சோசப் பெசுகி !


கல்வி:


பெசுகியாரின் இளமை வாழ்க்கையை முற்றிலும் அறிந்து கொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. தம்மூரில் உள்ள பள்ளியில் முதலில் கல்வி பயின்று வந்த இவர், பின்பு உரோமை (ROME) நகர் சென்று அங்கு கல்வி கற்றார். தம் தாய் மொழியான இத்தாலியில் ஓரளவு புலமை பெற்ற பின் உளவியல் நூல் (PSYCHOLOGY), சமய நூல் முதலியவற்றைப் பயின்றார் !

 

கிறித்து பெருமான் மீது பேரன்பு கொண்டிருந்த பெசுகியார், தமது 18 –ஆம் அகவையில் துறவு பூண்டு இயேசு திருச்சபையில் அடியவராய்ச் சேர்ந்து தம் வாழ்க்கையை இறைவன் திருப்பணிக்கு உரிமையாக்கினார் !

 

சமயப் பரப்புநர்ப் பயிற்சி:

 

இறைவன் திருப்பணிக்குத் தம்மை உரியவராக்கிய பெசுகியார், உரோமை நகரிலிருந்த கத்தோலிக்கப் பாதிரிமார் கழகத்தில் சேர்ந்து, சமயம் பரப்புநர்க்குரிய பயிற்சி பெறலானார். சிறிது காலம் இலக்கண ஆசிரியராகப் பணியாற்றிய பெசுகியார் அளவையியல் (LOGIC), மெய்யியல் (PHILOSOPHY) ஆகிய கலைகளையும் கற்றார்.!

 

குருப்பட்டம்:

 

பிரஞ்சு, கிரேக்கம், எபிரேயம், போர்த்துகீசியம் ஆகிய மொழிகளையும் கற்று அவற்றில் புலமையும் பெற்றார். கி.பி 1709 –ஆம் ஆண்டு குருப் பட்டம் பெற்றார். இயேசு பெருமானாரிடம் பயன்கருதாப் பக்தி பூண்டிருந்த பெசுகி அடிகளார், அப்பெருமானின் புகழைப் பரப்பப் பாரத நாட்டின் தென் பகுதியில் இருந்த தமிழ் நாட்டைத் தெரிவு செய்தார் !

 

இந்தியா வருகை:

 

கி.பி.1711 ஆம் ஆண்டு பெசுகி அடிகளார் கோவா வந்தடைந்தார். அங்கு நிறுவப்பட்டிருந்த வேத சாத்திரக் கல்லூரியில் ஒரு திங்கள் தங்கியிருந்து, தாம் மேற்கொள்ளப் போகும் புதிய பணிக்குத் தக்கவாறு பயிற்சி பெற்றார். சிறிதளவு தமிழும் அங்கு பயின்றார் !

 

மதுரை வருகை:

 

பிறகு கோவாவிலிருந்து கொச்சி துறைமுகம் வந்து அங்கிருந்து மதுரை மாவட்டம் வந்தடைந்தார். அக்காலத்தில் மதுரை மாவட்டத்தில் நிறுவப்பெற்றிருந்த மதுரை மிஷன்என்னும் கத்தோலிக்க சேவை அமைப்பின் அலுவலகத்திற்கு வந்து அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ! மதுரை மாவட்டத்தில் உள்ள காமநாயக்கன் பட்டியைத் தம் நிலைக்களமாகக் கொண்டு, பணியாற்றத் தொடங்கினார் !

 

பெயர் மாற்றம்:

 

தமிழக மக்களுடன் இரண்டறக் கலந்து ஒன்றிப் பழகினால், தமது மதப் பரப்புரை எடுபடும் என்பதை உணர்ந்தார். தமிழுக்கு முதன்மை கொடுத்து தமிழும் சமயமும் தழைக்கும் வகையில் தொண்டாற்ற உறுதிகொண்டார் ! தமிழரோடு தமிழராய்க் கலந்து உறவாட எண்ணினார். கான்சுடண்டைன் சோசப் பெசுகிஎன்னும் தமது பெயர் அதற்குத் தடையாய் இருப்பதை உணர்ந்து தமது பெயரை தைரியநாதர்என்று மாற்றிக் கொண்டார் ! இப்பெயரே பின்னாளில் வீரமா முனிவர்என்னும் விழுமிய பெயராய் வழங்கலாயிற்று !

 

தமிழ் கற்றல்:

 

மதப் பரப்புரைக்குத் தமிழில் போதிய புலமை தேவை என்பதை உணர்ந்து தமிழை ஆர்வமுடன் கற்கலானார். தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. பழநி நகரில் வாழ்ந்து வந்த சுப்ரதீபக் கவிராயர்என்னும் பெரும்புலவரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்கலானார். திருவாசகம் முதலிய பல நூல்களை மனப்பாடம் செய்து பாடிப் பழகினார் ! தமிழ் இலக்கணத்தை முற்றாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். யாப்பிலக்கணம் அவருக்கு எளிதாக மனப்பாடம் ஆயிற்று ! தமிழ் எழுத்துகளையும், சொற்களையும்  திருத்தமாகப் பலுக்கும் (உச்சரிக்கும்) கலை அவருக்குக் கைவரப் பெற்றது !

 

தமிழ்த் துறவி:

 

தமிழ்ப் பயிற்சியால் முற்றிலும் தமிழராய் மாறிய தைரியநாதர், நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டும், பாதக் குறடு அணிந்து கொண்டும் மக்களுடன் பழகலானார். காதில் முத்துக் கடுக்கன் அணிந்தார்; உடலில் காவி உடை  தரித்தார். முற்றிலும் தமிழ்த் துறவியாக மாறிய தைரியநாதர் மரக்கறி உணவையே உண்டு வாழ்ந்து வந்தார். அவரைத் தமிழர், தமிழ் முனிவராகவே கொண்டு போற்றினர் ! தைரிய நாதர் வீரமாமுனிவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார் !

 

ஏலாக்குறிச்சி ஆலயம்:

 

தஞ்சைக்கு 20 கி.மீ தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்னும் ஊரில் அடைக்கலமாதா ஆலயத்தை நிறுவினார். அவ்வூருக்கு திருக்காவலூர்என்றுப் பெயரிட்டு அழைத்தார். இவ்வூரைப் பற்றிய அவரது பாடல் தொகுதி திருக்காவலூர்க் கலம்பகம் என்று அழைக்கப்படுகிறது !

 

இலக்கியம் படைப்பு:

 

இஃதன்றி, திருக்காவலூர் அடைக்கல மாதாவின் பெயரில் அடைக்கலநாயகி வெண் கலிப்பா, அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கருணாம்பரப் பதிகம், கித்தேரியம்மாள் அம்மானை என்னும் சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார் !

 

தேம்பாவணி:

 

மக்கள் மனதிலே அழியாத இடம்பிடித்துள்ள பரமார்த்த குரு கதைஉங்களுக்கு நினைவிருக்கிறதா ? அதைப் படைத்தவர் வீரமா முனிவரே ! சதுரகராதிஎன்னும் தமிழ் அகரமுதலியை உருவாக்கியவரும் வீரமாமுனிவரே !  இவர் படைத்துள்ள பல இலக்கியங்களுள் தேம்பாவணி மிகமிகப் புகழ் பெற்ற இலக்கியமாகும். தேம்பாவணியீலிருந்து ஒரு பாடல்:-

----------------------------------------------------------------------------

 

அறக்கடல் நீயே; அருட்கடல் நீயே;

..........அருங்கரு ணாகரன் நீயே !

திறக்கடல் நீயே; திருக்கடல் நீயே !

..........திருந்துளம் ஒளிபட ஞான

நிறக்கடல் நீயே; நிகர்கடந் துலகில்,

...........நிலையும்நீ; உயிரும் நீ; நிலைநான்

பெறக்கடல் நீயே; தாயும்நீ எனக்குப்

...........பிதாவும்நீ. அனைத்தும்நீ அன்றோ ?

 

--------------------------------------------------------------------------

 

மறைவு:

 

எழுத்துச் சீர்திருத்தம் போன்ற பல்வகைத் தொண்டுகளைத் தமிழுக்கு ஆற்றியவர் வீரமாமுனிவர்.  இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்தில் பாடிப் பறந்த இந்த வெள்ளைக் குயில், தம் 67 –ஆம் அகவையில் 1747 –ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள், 4 –ஆம் நாள் தன் இறுதி மூச்சை தமிழ் மண்ணில் படரவிட்டுப் அடங்கிப் போயிற்று !

 

நம் கடமை:

 

இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகத்திற்கு வந்து, தமிழைக் கற்றுப் புலமை பெற்று, காப்பியங்கள் படைக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற வீரமாமுனிவர் போன்றவர்கள்  முன்னால், தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் தடுமாறும் நாம் சிற்றெறும்புகளாக அல்லவோ கூனிக் குறுகி நிற்கிறோம் !

 

இத்தாலியில் பிறந்து வளர்ந்த தமிழரல்லாத ஒருவர் தமிழைக் கற்றுக் கொண்டு, பெரும் புலமை பெற முடிகிறது; ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் நாம் தமிழில் புலமை பெற முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் நமது கருத்தின்மையும், உணர்வின்மையும், மடிமையுமே அன்றோ ?

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்’ வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

-----------------------------------------------------------------------------வீரமாமுனிவர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக