முன்னுரை:
தமிழ்த் தாத்தா என்று தமிழ் கூறும் நல்லுலகால் அன்புடன்
அழைக்கப்படும் உ.வே.சா அவர்கள் பிறந்த ஊரின் பெயர் உத்தமதானபுரம். திருவாரூர்
மாவட்டம். வலங்கைமான் வட்டத்தில் அமைந்துள்ள இவ்வூர், (தஞ்சை மாவட்டம்) பாபநாசத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது !
தோற்றம்:
கி.பி.1855 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் நாள் உத்தமதானபுரத்தில் உ.வே.சா எனப்படும் சாமிநாதன் பிறந்தார்.
இவரது தந்தை பெயர் வேங்கடசுப்பு ஐயர். தாயார் சரசுவதி அம்மாள் !
குடும்பம்:
இவரது தந்தை இசைக்கதைக் கலைஞராக (அரிகதா காலட்சேபக் கலைஞர்)
இருந்தமையால், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில்
குடும்பம் நடைபெற்று வந்தது. இருப்பினும் வருமானம் போதாமையால், பிழைப்பு நாடி இவர்கள் குடும்பம் பல ஊர்களுக்கும் இடம் பெயர
நேர்ந்தது !
கல்வி:
உத்தமதானபுரம் வேங்கடசுப்பு ஐயர் சாமிநாதன் எனப்படும் உ.வே.சா. தனது
தொடக்கக் கல்வியையும் இசைக் கல்வியையும் சொந்த ஊரில் இருந்த திண்ணைப் பள்ளி
ஆசிரியர்களிடம் கற்றார். சடகோப அய்யங்கார் என்னும் ஆசிரியரே இவருக்குத்
தமிழின்பால் ஆர்வத்தைத் தூண்டிவிட்டவர். தனது தந்தையின் நண்பரான சிதம்பரம் பிள்ளை
என்னும் ஆசிரியரிடம் திருவிளையாடற்புராணம்
முதலிய நூல்களைக் கற்றார் !
சிலகாலம் விருத்தாசலம் ரெட்டியார் என்பவரிடம். உ.வே.சா. சில தமிழ்
நூல்களைக் கற்றறிந்தார். பின்பு, அவரது 17 ஆம் அகவையில் நாகை மாவட்டம்
திருவாடுதுறை திருமடத்தில் தமிழ் கற்பித்துவந்த மகாவித்துவான் திருசிரபுரம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் அவரிடம்
தமிழ் பயின்றார்.
திருமணம்:
அக்கால வழக்கப்படி உ.வே. சாமிநாதனுக்கு அவரது 14 -ஆம் அகவையில் திருமணம் நடந்தது. மணப் பெண்ணின் அகவையோ எட்டு. உ.வே.சா
பிறந்தது முதலே வறுமையைச் சந்தித்து வந்த அவரது தந்தை உள்ளிட்ட குடும்பம், திருமணச் செலவுக்குக் கூட பொருளின்றித் தவித்தது. ஊராரின் உதவியால்
தான், திருமணம் நடந்தேறியதாக உ.வே.சா. அவரது
தன்வரலாற்றில் குறிப்பிடுகிறார் !
திருமடத் தலைவர் உதவி:
திருவாவடுதுறை (ஆடுதுறை) சிவத் திருமடத்தில் தங்கி, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் பயின்று வந்ததால், அம் மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், உ.வே.சா மீது பரிவும் அன்பும் கொண்டிருந்தார். உ.வே.சா. வின்
குடும்பம் வறுமையில் உழல்வதை அறிந்த திருமடத்தின் தலைவர், மடத்தின் வளாகத்தில் இருந்த ஒரு வீட்டில் அவரது தந்தை உள்ளிட்ட
குடும்பத்தினர் தங்கி வாழ்ந்து வர இசைவளித்தார் ! உ.வே.சா.வின் வாழ்க்கை
உயர்வுக்கு திருவாவடுதுறை மடம் பல்லாற்றானும் பெருமளவில் உதவி புரிந்திருக்கிறது !
ஆசிரியப்பணி:
கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்த தியாகராயச்
செட்டியாரின் உதவியால், உ.வே.சா. அவர்களுக்கு அக்கல்லூரியில்
தமிழாசிரியராகப் பணியமர்த்தம் கிடைத்தது. சென்னை மாநிலக் கல்லூரியிலும் சில காலம்
உ.வே.சா. தமிழாசிரியராகப் பணியாற்றினார். !
நூல் வெளியீடு:
பனையோலைச் சுவடிகளில் இருந்த சீவக சிந்தாமணியை புத்தகமாகப்
பதிப்பித்து 1887 ஆம் ஆண்டு வெளியிட்டார்.. உ.வே.சா.
வின் முதல் வெளியீடு இதுவே. அதன் பின்பு, ஊர் ஊராகச்
சென்று பனையோலைச் சுவடிகளாக இருந்த இலக்கியங்களை எல்லாம் திரட்டி, அவற்றைப் புத்தகங்களாகப் பதிப்பித்து வெளியிடும் பணியில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார் !
ஓலைச் சுவடித் திரட்டு:
தமிழ் இலக்கியங்கள் எதுவும் புத்தக வடிவில் இல்லாத காலம் அது !
அனைத்து இலக்கியங்களும் ஓலைச் சுவடிகளாகவே இருந்தன. அவ்வோலைச் சுவடிகளும்
ஒருவரிடம் மட்டுமே இல்லாமல் ஆயிரக் கணக்கான மாந்தர்களிடம் பரவலாக் கிடந்தன. ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தை
எடுத்துக்கொண்டால் அஃது ஒருவரிடம் மட்டுமே
இல்லாமல், பல்படிகளாக (MULTI COPIES) பலரிடம் இருந்தன ! ஊர் ஊராக அலைந்து
திரிந்து, சுவடி வைத்திருப்போரிடம் இரவலனைப் போல்,
கெஞ்சிக் கேட்டு, திரட்டிக் கொண்டு வரும் பணியில் தன் வாழ்நாளை எல்லாம் செலவிட்டார்
உ.வே.சா. !
நூற்பதிப்பு:
ஒன்றுக்கும் மேற்பட்டப் படிகளாக
ஓலைச் சுவடிகளில் இருந்த இலக்கியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்து,
சிதைவுற்ற பாடல் அடிகளையும் சொற்களையும்
கண்டறிந்து அதைப் புத்தகமாக வெளிக் கொணரும் பணி எளிதான செயலாக அவருக்கு இருக்க
வில்லை ! இராப் பகலாக கண்விழித்து, ஓலைச் சுவடிகளை ஒப்பிட்டு, முழு நூலாக அவர் வெளியிட்ட இலக்கியங்கள் ஏராளம் ! ஏராளம் !
சங்க இலக்கியங்கள்:
அழிந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்
பலவற்றின் ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை அச்சிட்டுப்
பதிப்பித்தார் உ.வே.சா. இவ்வாறு அவர் பதிப்பித்த இலக்கியங்களில் திருமுருகாற்றுப்
படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, போன்ற தொண்ணூறு நூல்கள் அடங்கும்.
அச்சுப்பதித்த நூல்கள்:
சங்க இலக்கியங்களன்றி, புராணங்கள் 12,
பெருங்கதைகள் 9, தூது நூல்கள் 6, வெண்பா நூல்கள் 3, அந்தாதி நூல்கள் 2, பரணி நூல்கள் 2, மும்மணிக் கோவை நூல்கள் 2, இரட்டை மணிமாலை
நூல்கள் 2, சிற்றிலக்கியங்கள் 4 ஆகியவற்றையும் உ.வே.சா ஓலைச் சுவடிகளிலிருந்து மீட்டெடுத்துப்
பதிப்பித்து வெளியிட்டுள்ளார் !
மதிப்புறு முனைவர்:
தமிழுக்கு அரும்பெருந் தொண்டாற்றிய உ.வே.சா அவர்களுக்கு சென்னைப்
பலகலைக் கழகம் 1932 ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் பட்டம்
அளித்துப் பெருமைப் படுத்தியது !
புகழுடம்பு எய்தல்:
தன் வாழ்நாளெல்லாம் தமிழ்ப் பணியே தன் தலையாய பணி என்று தொண்டாற்றிய
தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் 1942 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் தனது 87 ஆம் அகவையில் புகழுடம்பு எய்தினார் !
தனது தமிழ்ப் பணி மூலம் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் உ.வே.சா
! தமிழ்ப் பணிமன்றம் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் ?
-----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:2053, மீனம்
(பங்குனி) 13]
{27-03-2022}
உ.வே.சா |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக