தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

(31) பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் - வரலாறு !


தோற்றம்:

 

திருச்சி நகரை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள அரசங்குடி என்னும் ஊரில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் நாள் ஞானசம்பந்தன் பிறந்தார். அவரது தந்தார் பெயர் அ.மு.சரவணமுதலியார். தாயார் சிவகாமி அம்மையார் !

 

கல்வி:

 

தனது தொடக்கக் கல்வியை அரசங்குடியில்  கற்ற ஞானசம்பந்தன், உயர்நிலைப் பள்ளிக் கல்வியை இலால்குடியில் உள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து இடைநிலைக் கல்வி வகுப்பில் (INTERMEDIATE) இயற்பியல் பாடத்தைத் தேர்வு செய்து படித்தார். அப்போது அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், ஞானசம்பந்தனின் தமிழறிவையும் ஆர்வத்தையும் கண்டு அவரைத் தமிழ்ப் பாடத்திற்கு மாறும்படிச் செய்தார் !

 

இங்கு படிக்கையில், இவருக்கு திரு.வி.க., தெ.பொ.மீ., போன்ற அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. ஆகையால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே தமிழில் பயின்று  கலையியல் வாலை (B.A), கலையியல் மேதை (M.A) ஆகிய பட்டங்களையும் பெற்றார் ! அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் பயில்கையில், இவருடன் படித்தவர்கள் பேராசிரியர் க.அன்பழகன்,  நாவலர். இரா.நெடுஞ்செழியன், பொதுவுடைமைக் கட்சியில் புகழ் பெற்று விளங்கிய பாலதண்டாயுதம் போன்றோர் ஆவர் !

 

திருமணம்:

 

அ.ச.ஞானசம்பந்தனுக்கு 1940 ஆம் ஆண்டு அவரது 24 ஆம் அகவையில் திருமணம் நிகழ்ந்தது. காதல் திருமணம் ! தன்னுடன் பயின்ற இராசம்மாள் என்பவரைக் காதலித்து, பல எதிர்ப்புகளையும் தடைகளையும் கடந்து, மருத்துவர். தர்மாம்பாள் தலைமையில் தனது திருமணத்தை நிகழ்த்திக் காட்டினார்.  இவ்விணையருக்கு மெய்கண்டான், சரவணன் என இரு ஆண் மகவினரும் சிவகாமசுந்தரி, பங்கயச்செல்வி, அன்புச் செல்வி, மீரா ஆகிய நான்கு பெண் மகவினரும் பிறந்தனர் !

 

ஆசிரியப் பணி:

 

தமிழில் கலையியல் மேதை பட்டம் பெற்ற பின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1942 ஆம் ஆண்டு விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து 1956 வரை 14 ஆண்டுகள் அங்குப் பணி புரிந்தார்.  மாணவர்களின் திறனறிந்து அவர்களுக்குக் கற்பிக்கும் வல்லமை படைத்தவராக இவர் திகழ்ந்தார். இவரது வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் பலர். அவர்ளுள் பேராசிரியர் ந.சஞ்சீவி, முனைவர் ப.இராமன், முனைவர் சித்தலிங்கையா, பேராசிரியர் மா.இரா.போ.குருசாமி போன்றோர் முதன்மையானவர்கள் !

 

வானொலி நிலையப் பணி:

 

இவரது தமிழாற்றல் சென்னை வானொலி நிலைய அலுவர்களை ஈர்த்தது. எனவே இவர் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து விடுவிப்புப் பெற்று, சென்னை வானொலி நிலையத்தில் நாடகங்கள் புனைவுப் பிரிவின் தலைமை அலுவலராக 1956 ஆம் ஆண்டு பொறுப்பேற்று 1961 வரை ஐந்தாண்டுகள் அங்கு பணியாற்றினார் ! பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை தந்து இனிய குரலில் பாட, அதற்கு அ.ச.ஞா. அவர்களே விளக்கமளிக்கும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. இசையறிஞர்,எசு.இராமநாதனின் இசையமைப்பில் ஆய்ச்சியர் குரவையை ஒலிபரப்பச் செய்தார். மணிமேகலை,கம்ப இராமாயணம், கலிங்கத்துப் பரணி போன்றவற்ரை வானொலி நாடகங்களாக்கி அளித்தார். எம்.எம்.தண்டபாணி தேசிகரைப் பாட வைத்து சிலம்பு நாடகத்தை அரங்கேற்றினார் !

 

பிற பணிகள்:

 

1959 ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித் துறையில் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநர் பணிக்கு அ.ச.ஞா. தேர்வானார். பின்னர் தமிழ் வெளியீட்டுத் துறையின் பொதுத்துறைச் செயலாளராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். 1967 முதல் 1970 வரை மீண்டும் அதே தமிழ் வெளியீட்டுத் துறையின் இயக்குநர் பொறுப்பேற்றார். அக்காலத்தில் 350க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை இவர் தமிழில் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது ! 1940ல் கம்பனடிப்பொடி சா. கணேசனால் காரைக்குடியில் கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதுமுதல் 1985 வரை ஒவ்வோர் ஆண்டும் அதில் சிறப்புரையாற்றுவதை அ.ச.ஞா. வழக்கமாக வைத்திருந்தார் !

 

பல்கலைக் கழகப் பணி:

 

மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ., அ.ச.ஞா.வைத் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்க அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற அ.ச.ஞா. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக  1970 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 1973 வரை மூன்றாண்டுகள் பணியாற்றி, அதிலிருந்து ஓய்வு பெற்றார் !

 

படைப்புகள்:

 

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அகமும் புறமும்”, “அரசியர் மூவர்”, “அருளாளர்கள்”, ”ஈராவணன் மாட்சியும் வீட்சியும்”, “இலக்கியக் கலை”, “இன்றும் இனியும்”, “இன்னமுதம்”, “கம்பன் கலை”, “தொட்டனைத்தூறும் மணர்கேணி”, ”பாரதியும் பாரதி தாசனும்”, “புதிய கோணம்உள்பட 39 நூல்களை எழுதியுள்ளார் ! தாகூர், ஜான் டெவி, தொரோ போன்றோரது நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். தெள்ளாறு நந்தி உட்படப் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார் !

 

பன்முக அறிஞர்:

 

அ.ச.ஞானசம்பந்தன், தமிழறிஞர் மட்டுமல்ல, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். இவரது தந்தையார் அ.மு.சரவண முதலியாரும் தமிழறிஞராக விளங்கியவர் என்பதால், இளமையிலேயே ஞானசம்பந்தனிடம் தமிழ் ஊற்றாகப் பெருக்கெடுத்த்து. இவர் தனது ஒன்பதாவது அகவையில் துறையூர் சைவசமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசி, குழுமியிருந்த சான்றோர்களின் பாராட்டைப் பெற்றார் !

 

சொற்பொழிவாளர்:

 

தூத்துக்குடியில் வ,உ.சி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் ஞானசம்பந்தன் தனது 15 ஆம் அகவையில் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களுடன் மேடையேறி உரையாற்றிப் புகழ் பெற்றார் ! ஒருமுறை எசு.வையாபுரிப் பிள்ளை, சச்சிதானந்தன் பிள்ளை திரு.வி.க போன்றோர் கலந்து கொண்ட சைவ சித்தாந்த பேரவைக் கூட்டத்தில் இவர் உரையாற்றினார். இவரது சொற்பொழிவால் கவரப்பெற்ற திரு,வி.க., பின்னாளில் ஞானசம்பந்தனின் முதன்மை வழிகாட்டியாகச் செயல்பட்டு இவரது முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவினார் !

 

விருதுகள்:

 

பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனுக்கு தமிழ் மொழி அறிஞர்களுக்கான சாகித்திய அகாதமி விருது 1985 ஆம் ஆண்டில் வழங்கப்பெற்றது. தமிழ் மூதறிஞர்”, “தமிழ்ச் செம்மல்”, “இயற்றமிழ்ச் செல்வர்”, “செந்தமிழ் வித்தகர்”, “கம்பன் மாமணிபோன்ற பல பட்டங்களையும், ”இராசா அண்ணாமலைச் செட்டியார் விருது”, ”திரு.வி.க விருது”, “குறள் பீட விருது”, “கலைமாமணிவிருது, “தருமபுர ஆதீன விருது”, “கபிலர் விருதுஉள்படப் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார் !

 

மறைவு:

 

இத்தகைய புகழ் மிக்க தமிழறிஞரான அ.ச.ஞானசம்பந்தனார் 2002 ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், 27 ஆம் நாள், தமது 86 ஆம் அகவையில் இப்பூவுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

 

முடிவுரை:

 

செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர் செயற்கரிய செய்கலாதார் என்னும் வள்ளுவரின் வாக்குப் படி திருவாசகத்தைப் பற்றிய சிந்தனைகள் ஐந்து தொகுதிகள் படைத்த பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், உண்மையிலேயே தாம் பெரியவர்தான் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய அருளாளர் ! உழைப்பவர்கள் உயர்வடைவார்கள் என்பதற்குச் சான்றாகிய விளங்கிய அ.ச.ஞா. அவர்களின் புகழ் ஓங்குக ! அவரது தமிழாற்றல் தமிழ்ப் பணி மன்ற நண்பர்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைவதாக !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

------------------------------------------------------------------------------------

அ,ச,ஞானசம்பந்தன்

(30) முனைவர்.தமிழண்ணல் - வரலாறு !

 

தோற்றம்:

 

முனைவர் தமிழண்ணல் அவர்களின் இயற்பெயர் இராம.பெரியகருப்பன். சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள நெற்குப்பை என்னும் ஊரில்  இராமசாமிச் செட்டியார் கல்யாணி ஆச்சி இணையருக்கு மகனாக இவர் 1928 -ஆம் ஆண்டு, ஆகத்து 12 ஆம் நாள் பிறந்தார் !

 

கல்வி:

 

தொடக்கக் கல்வியை உள்ளூரிலும், உயர் பள்ளிக் கல்வியை, பள்ளத்தூர் ஏ.ஆர்.சி உயர்நிலைப் பள்ளியிலும் பெற்ற இராம கருப்பன், மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் பயின்று 1948 ஆம் ஆண்டு தமிழில் வித்துவான்  பட்டம் பெற்றார். பிறகு தனிப் பயிற்சி  வாயிலாக, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பொருளியலில் கலையியல் வாலை (B.A) பட்டம் பெற்றார். 1961 –ஆம் ஆண்டு தமிழில் கலையியல் மேதை (M.A) பட்டம் பெற்றார். மதுரை தியாகராயர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகையில், “சங்க இலக்கிய: மரபுகள்என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றார் !

 

திருமணம்:

 

தமிழண்ணலுக்கு 1954 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் நாள் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் தெய்வானை ஆச்சி.  இவ்விணையருக்கு சோலையப்பன், கண்ணன், மணிவண்ணன் என்னும் 3 ஆண் மக்களும் கண்ணம்மை, அன்புச் செல்வி, முத்துமீனாள் என்னும் 3 பெண் மக்களும் பிறந்தனர் !

 

ஆசிரியப்பணி:

 

தமிழண்ணல் அவர்கள் காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தம் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். ஏறத் தாழ 13 ஆண்டுகள் இப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார். இவரது கடின உழைப்பையும், சங்க இலக்கியத்தில் இருந்த ஈடுபாட்டையும்  பாராட்டி, மதுரை, தியாகராயர் கல்லூரித் தாளாளர் கருமுத்து தியாகராயன் செட்டியார் இவரை தனது கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் அமர்த்தினார் !

 

இங்கு தமிழண்ணல் சற்றேறக் குறைய 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த முனைவர், மு.வ. அவர்கள் 1971 ஆம் ஆண்டு தமிழண்ணலுக்குப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இடம் கிடைக்கச் செய்தார். ஈராண்டுகளில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வும் பெற்றார் !

 

பின்னர் அஞ்சல் வழிக் கல்விப் பேராசிரியர், தமிழியல் துறைப் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர் பணி எனப் பல நிலைகளில் பணிபுரிந்துள்ளார். இறுதியாக, தமிழ்த் துறைத் தலைவராகப்  பணியாற்றி ஓய்வு பெற்றார்.  1981-82 ஆம் கல்வியாண்டில் நிதி நல்கைக் குழுவின் தேசியப் பேராசிரியராகவும் அறிவிக்கப் பெற்றுப் பெருமைப் படுத்தப்பட்டார். மேலும் ஈராண்டுகள் இங்கு சிறப்புப் பேராசிரியராகவும் பணியில் இருந்திருக்கிறார் !

 

பிற பொறுப்புகள்:

 

மதுரை, காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், வெங்கடேசுவரா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், கோழிக் கோடு பல்கலைக்  கழகம் உளிட்ட பல பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டக் குழு உறுப்பினராகச் சிறப்பாகச் செயல்பட்டார். சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகத் தமிழக அரசால் அமர்வு செய்யப்பட்டார். 1985 –ஆம் ஆண்டு முதல் ஞானபீட விருதுக்குரிய கருத்துரைஞர் குழுவில் பணியாற்றி வந்தார். தமிழக அரசின் சங்க இலக்கியக் குறள் பீடத்தின் துணைத் தலைவராகவும் பணி புரிந்தார் !

 

சிறப்புகள்:

 

தமிழண்ணல் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்த போது, இவருக்கு நெறியாளராக இருந்தவர்கள் முனைவர் சி. இலக்குவனாரும் முனைவர் அ.சிதம்பரநாதனும் ஆவர். இவரது மாணவர்களே முனைவர் கா.காளிமுத்துவும், முனைவர் மு. தமிழ்க்குடிமகனும். இவ்விருவருக்கும் முனைவர் பட்ட ஆய்வின் போது வழிகாட்டியாக விளங்கியவர் தமிழண்ணல். இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு நெறியாளராக இருந்திருக்கிறார் !

 

படைப்புகள்:

 

தமிழ் இலக்கணம் குறித்து ஐம்பதுக்கும் மேற்பட்டக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வாழ்வரசி”, “நச்சு வளையம்”, “தாலாட்டு”, “காதல் வாழ்வு”, “பிறை தொழும் பெண்கள்”, “சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கைகள்”, “சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கிய வகைகள்”, “தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்”, “புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு”, ”தமிழியல் ஆய்வு”, “ஆய்வியல் அறிமுகம்”, “ ஒப்பிலக்கிய அறிமுகம்:, “ குறிஞ்சிப் பாட்டு இலக்கியத் திறனாய்வு  விளக்கம்”, “தொகாப்பியம் உரை”, “நன்னூல் உரை”, “ புறப்பொருள் வெண்பா மாலை உரை”, “யாப்பருங்கலக் காரிகை உரை”, “தண்டியலங்காரம் உரை”, “சொல் புதிது ! சுவை புதிது !”, “தமிழில் அடிக்கடி நேரும் பிழைகளும் திருத்தமும்”, “தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா ?”, “ பேசுவது போல் எழுதலாமா ?”,   உரை விளக்கு”, “ உயிருள்ள மொழி  உள்பட எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழண்ணல் எழுதியுள்ளார் !

 

தினமணி இதழில்  வளர் தமிழ்ப் பகுதியில் உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்என்ற தலைப்பில் எழுதியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார் !

 

விருதுகள்:

 

தமிழக அரசின் திரு.வி.க. விருது 1989 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மையைப் பற்றி இவர் படைத்த கவிதை நூலுக்கு தமிழக அரசின் முதற் பரிசு கிடைத்தது !

 

1995 -ஆம் ஆண்டு தமிழ்ச் செம்மல்விருதினை மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இவருக்கு அளித்துப் பெருமைப் படுத்தியது. இவை தவிர நடுவணரசின் தமிழறிஞர்களுக்கான செம்மொழி விருது”, தமிழக அரசின் கலைமாமணி விருது”, எசு.ஆர்.எம் பல்லைக் கழகத் தமிழ்ப் பேராயத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் இவருக்கு வழங்கப்பெற்றன !

 

மறைவு:

 

மாபெரும் தமிழறிஞரான முனைவர் தமிழண்ணல் அவர்கள் 2015 –ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 29 ஆம் நாள் தமது 88 ஆம் அகவையில் தமது பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

 

முடிவுரை:

 

தமிழார்வலர்கள் இடையே தமிழண்ணல் அவர்களுக்கு மிக்க மதிப்பு இருந்தது. தமிழ் வளர்ச்சிகாகப் பல்லாற்றானும் பாடுபட்ட பேராசான் தமிழண்ணல் அவர்களுடைய புகழ் என்றும் நிலைத்து நிற்கும் !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

{திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

------------------------------------------------------------------------------------

முனைவர்.தமிழண்ணல்

 

 

திங்கள், 30 மே, 2022

(29) வ.அய்.சுப்ரமணியம் - வரலாறு !


தோற்றம்:

 

தமிழறிஞரான வ.அய்.சுப்ரமணியம், குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரி என்னும் ஊரில் 1926 –ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் அய்யம்பெருமாள் பிள்ளை. தாயார் சிவகாமி அம்மையார் !

 

கல்வி:

 

வடசேரியில் தனது தொடக்கக் கல்வியை நிறைவு செய்த சுப்ரமணியம், அங்குள்ள சிறீ மூல ராம வர்மா (S.M.R.V) இந்து உயர்நிலைப் பள்ளியில் 1941 ஆம் ஆண்டு தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். பின்பு நாகர்கோவில் சுகாட் கிறித்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (INTERMEDIATE) மற்றும் கலையியல் வாலை (B.A) படிப்புகளை நிறைவு செய்தார் ! 


சிதம்பரம்  அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் தமிழில் கலையியல் மேதை (M.A) படிப்பில் சேர்ந்து 1946 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில், 1957 ஆம் ஆண்டு மொழியியலில் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் இவரது சேவையைப் பாராட்டி 1983 ஆம் ஆண்டு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியது !

 

கல்விப் பணி:

 

திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் 1947 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த சுப்ரமணியம் ஆறாண்டுகள் அங்கு பணி புரிந்தார். அதையடுத்து திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் 1953  முதல் ஐந்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் !


இப்பல்கலைக்கழகம் 1958 ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக் கழகம்எனப் புத்துரு பெற்ற போது அங்கு தமிழ் மற்றும் மொழியியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். இப்பல்கலைக் கழகத்தின் கீழைக்கலைப் புலத்தின் முதன்மையராக (DEAN, FACULTY OF ORIENTAL LANGUAGES) 1978 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுப் பணி புரியத் தொடங்கினார் !

 

துணைவேந்தர்:

 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக 1981 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமர்வு செய்யப்பெற்ற வ.அய்.சுப்ரமணியம் 5 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணி புரிந்தார். இப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக் கழக இணைவேந்தராக 1997 முதல் 2001 வரை பணியாற்றினார் !

 

பிற பொறுப்புகள்:

 

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், இந்திய நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப் பெயர் ஆய்வு நிறுவனம், தில்லியில் உள்ள ஞானபீட நிறுவனம், போன்ற பல்வேறு நிறுவனங்களில் இவரது பங்களிப்பு  பலராலும் பாராட்டப் பெற்றது !


காலஞ்சென்ற தனிநாயக அடிகளாருடன் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்உருவாக்கி, அதன் மூலம் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறக் காரணமாக விளங்கினார். 1967 முதல் 1980 வரை  பதின்மூன்று ஆண்டுகள் இவ்வமைப்பின் பொதுச் செயலாளராகவும்  பொறுப்பு வகித்தார் !

 

படைப்புகள்:

 

பல துறை சார் ஆய்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 150 எண்ணிக்கைக்கும் மேலாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 215 நூல்களை வெளியிட்டுள்ளார் !

 

தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தடம் பதித்தவர்:

 

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக தமிழக அரசு ஆணையிட்டு, வ.அய்.சுப்ரமணியம் அவர்களைத் துணைவேந்தராகவும் அமர்வு செய்த பிறகு, அப்பல்கலைக் கழகத்தின் கட்டடங்கள் வடிவமைப்பிலிருந்து, கல்விப்புலங்கள் (FACULTIES) உருவாக்கம் வரை ஒவ்வொன்றிலும் வ.அய்.சு அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை  வெளிப்பட்டது !

 

” – “மி” – “ழ்”  என்னும் மூன்று எழுத்துகளின் வடிவங்கள்  பறவைப் பார்வை நோக்கில் (BIRD’S EYE VIEW) தெரியும் வகையில் பல்கலைக் கழகக் கட்டடத் தொகுதிகளை  வடிவமைத்துக் கட்டச் செய்தது, வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் தமிழ்ப்புலம், சுவடிப்புலம் என ஒவ்வொரு கல்விப் புலத்திற்கும் பெயர் வைத்தது,  பல்கலைக் கழக வளாகம்  முழுவதும் மா, பலா, நெல்லி, மருது, ஆல், அரசு, வேம்பு, வனச்சுடர், மாவிலங்கம், தில்லை, மகிழ், கருவிளம், நறுவிலி, பூவரசு, காஞ்சி, அத்தி  என வகை வகையான மரங்களை நட்டுப் பயிராக்கிச் சோலைவனமாக மாற்றியது வரை வ.அய்.சு அவர்கள் ஒவ்வொரு துறையிலும் தடம் பதித்திருக்கிறார் !

 

தஞ்சையில் இவர் வடித்த சொல்லோவியம்:

 

தஞ்சைத் தமிழ்ப் பல்கலகத் துணைவேந்தர் பதவியிருந்து ஓய்வு பெறுகையில் வ.அய்.சு அவர்கள் எழுதிய குறிப்பு அழகிய சொல்லோவியம் ஆகும். இதோ அவரது எழுத்துப் பதிவு:


"இன்று (31.7.1986) மாலை 5 மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து, ஆய்வுக்காக திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போலப் பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது !


கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அனைவருடன் உழைத்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கிறோம் என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் !


தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்று ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுச்சான்றோர் சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் ! என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும் !


நல்கைகள் குறையும், பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர், அலுவலர் கையில் எப்போதும் இருக்கும் !


"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம். "அறநெறி தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம் !


தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன் பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில், அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சி இருப்பின் என் முகம் வாடும் !


அன்றுள்ள (இன்றுள்ள) பல்கலைக்கழக அலுவலர்கள் அனுமதித்தால், நான் காலமான பிறகு என் உடல் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை பல்கலைக்கழக தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர், புதைத்திடுக ! நீங்கள் அனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்' ! என்னே அவரது சீரிய மனப்பாங்கு !

 

குப்பம் திராவிடப் பல்கலைக் கழகம்:

 

திராவிடப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்க நடுவணரசு முடிவு செய்து இவரை இணைவேந்தராக அமர்வு செய்தது. திராவிடம் என்னும் சொல்லின் பொருளுக்கு ஏற்ப தமிழகம், கரைநாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் அணுக்கமாக அமைந்துள்ள குப்பம்என்னுமிடத்தை இவர் தேர்ந்தெடுத்து, அங்கு திராவிடப் பல்கலைக் கழகம் அமையச் செய்தார். பெரிய நூலகம் ஒன்றை அங்கு உருவாக்கினார். பல்கலைக் கழகத்துக்கான கட்டடங்கள் பலவற்றையும் இவரே முன்னின்று வடிவமைத்துக் கட்டச் செய்தார் !

 

மறைவு:

 

உலகம் போற்றும் தமிழறிஞராக உயர்ந்து, தமிழுக்கு அளப்பரிட பணிகளை ஆற்றிய மாபெரும் மேதை 2009 ஆம் ஆண்டு, சூன் திங்கள், 29 ஆம் நாள், தமது 84 ஆம் அகவையில் மீளாத் துயிலில் ஆழ்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய இப்பெருமகனை, தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களும், அலுவலர்களும், மாணாக்கர்களும் வானுறையும் தெய்வமாகவே இன்றும் மதிக்கின்றனர் !

 

முடிவுரை:

 

அனைத்து வகையிலும் நமக்கு முன்னெறியாக (ROLE MODEL) வாழ்ந்து கட்டிய வ.அய்.சு அவர்களைப் போல் நாமும் தமிழ்ப் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதி  ஏற்போம் ! இதுவே அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

------------------------------------------------------------------------------------

வ.அய்.சுப்ரமணியம்.