தோற்றம்:
கவிமணி அவர்கள் 1876 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 27 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் இருந்து 4 கல் தொலைவில் உள்ள தேரூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தையார்
பெயர் சிவதாணுப் பிள்ளை. தாயார் ஆதிலட்சுமி அம்மையார் !
கல்வி:
தேரூர் என்பது
திருவாங்கூர் மன்னர் ஆட்சிப் பகுதிக்குள்
அமைந்திருந்ததால் கவிமணி தனது தொடக்கக் கல்வியின் போது மலையாளம் கற்றுக் கொண்டார்.
பள்ளிகளில் மலையாளமே கற்பிக்கப்படும் சூழ்நிலையில், சாந்தலிங்கத் தம்பிரான் என்ற துறவியிடம் தமிழைப் பயின்றார். தனது
ஒன்பதாவது அகவையிலேயே தந்தையை இழந்த கவிமணி
தொடக்கக் கல்வியை உள்ளூரிலேயே நிறைவு செய்தார். அடுத்து உயர்நிலைப்பள்ளிக்
கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் சேர்ந்து கலையியல் மேதை (M.A)
பட்டம் பெற்றார் !
திருமணம்:
1901 ஆம் ஆண்டு
கவிமணியின் 25 ஆம் அகவையில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவர்
மனைவியின் பெயர் உமையம்மை. இவர், குமரி மாவட்டம் புத்தேரி என்னும் ஊரைச்
சேர்ந்தவர். குமரி மாவட்டத்தை மக்கள் நாஞ்சில் நாடு என்றும் அழைப்பதுண்டு. நாஞ்சில்
நாட்டு வழக்கப்படி, ஆடவன் தன் மனைவியைக் குட்டி அல்லது
பிள்ளாய் என்று அழைப்பது வழக்கம். ஆனால் கவிமணியோ தன் மனைவியைத் ”தாயி” என்றே மதிப்புடன் அழைத்து வந்தார் !
கான்முளை:
கவிமணி –
உமையம்மை இணையருக்குக் குழந்தைப் பேறு இல்லை;
ஆகையால் தனது தமக்கை மகன் சிவதாணுவை தனது மகன்
போலவே வளர்த்து வந்தார் !
பணி:
பட்டப்
படிப்புக்குப் பிறகு ஆசிரியர்
பயிற்சியையும் முடித்த கவிமணி, தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர்
ஆனார். குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு தொடக்கப்பள்ளி, நாகர்கோயில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மற்றும் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணி புரிந்தார் ! தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும்
பெற்றவர் கவிமணி !
கவிமணி:
குழந்தைகளுக்கான
பாடல்களை நிரம்ப எழுதி இருக்கிறார். சிறு குழந்தைகள் கூட பாடலின் பொருளைப்
புரிந்து கொள்ளும் அளவுக்கு இவரது பாடல்கள் மிக எளிமையான தமிழில் இருந்தன. எனவே,
தமிழறிஞர்கள் குழு இவருக்குக் “கவிமணி” என்னும் பட்டத்தை வழங்கிப்
பெருமைப்படுத்தினர் !
பாடல்கள்:
1938 ஆம் ஆண்டு
வெளியான அவரது “மலரும் மாலையும்” நூலில் இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், ஏழு கதைப் பாட்டுகள் இடம் பெற்றிருந்தன. அத்தொகுதியில் “அப்பம் திருடின எலி” , “பசுவும் கன்றும்”,
பொம்மைக் கலியாணம்” போன்றவை இளம் பிள்ளைகளுக்கு மகிழ்வைத் தந்ததோடு, உலக நடைமுறையையும் உணர்த்த வல்லதாக அவை இருந்தன. “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி” என்னும் அவரது பாடல் மிகப் புகழ் பெற்றதுடன், இன்றளவும் மக்களிடையே நிலைத்து நிற்கிறது !
பொதுமை நோக்கு:
மக்கள்
குமுகாயத்தில் சாதிப்பிரிவு ஒரு கேடாக மேலோங்கி நிற்றலைக் கண்டுணர்ந்த கவிமணி,
மனிதர் யாவரும் சரிநிகர் என்பதே அக்கவிஞரின்
உள்ளக்குரல். நாமெல்லாம் பாரதத் தாயின் பிள்ளைகள் என்று உயர்வு தாழ்வு கற்பிக்கும்
மாந்தர்களை நோக்கி,
-----------------------------------------------------------------------------
கீரியும்
பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி
கீழென்றும் மேலென்றும்
நாட்டிவிட்டுப்
பாரதத்தாய்
பெற்ற மக்களென்று நிதம்
பல்லவி
பாடிப்பய னெதுவோ ?
-----------------------------------------------------------------------------
எனக் கேள்வி
கேட்டார் கவிமணி !
பன்முகப்
பாவலர்:
பக்திப்
பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய பாடல்கள், குழந்தைப் பாடல்கள், இயற்கைக் காட்சிப் பாடல்கள், வாழ்வியல் போராட்டப் பாடல்கள், குமுகாய நோக்குப் பாடல்கள், தேசிய நோக்குப்
பாடல்கள், வாழ்த்துப் பாடல்கள், கையறு நிலைப் பாடல்கள், பல்சுவைப் பாடல்கள் என
விரிவான தளத்தில் செயல்பட்டவர் கவிமணி !
படைப்புகள்:
ஆராய்ச்சித்
துறையிலும் கவிமணி பல அரிய பணிகளை ஆற்றி இருக்கிறார். 1922 ஆம் ஆண்டு. “மனோன்மணியம் மறுபிறப்பு” என்னும் திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்
கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார் !
(01) அழகம்மை ஆசிரிய விருத்தம், (02) ஆசிய சோதி, (03) மலரும் மாலையும், (04) மருமக்கள் வழி மான்மியம். (05) கதர் பிறந்த கதை, (06) உமர் கயாம்
பாடல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு, (07) தேவியின்
கீர்த்தனங்கள், (08) குழந்தைச் செல்வம், (09) கவிமணியின் உரைமணிகள் ஆகிய நூல்கள் இவரது படைப்புகள் ஆகும் !
கொல்லாமை:
இளமைப்
பருவத்தில் கோவில் ஒன்றில், கொடை காணச் சென்றார் கவிமணி. அங்கே
ஆட்டினைப் பலி கொடுக்கும் காட்சியைக் கண்ட கவிமணிக்கு நெஞ்சம் உருகியது. அதன்
விளைவாக கவிமணி இயற்றிய பாடல்களில் பல, கொல்லாமையை வலியுறுத்தின !
பொதுநலம்:
கவிமணிக்கு,
நாட்டுக் கோட்டை நகரத்தார், அண்ணாமலைச் செட்டியார் தலைமையில் பாராட்டு விழா நடத்தி, பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்தனர். ஆனால், அதைத் தனக்கென வைத்துக் கொள்ளாமல், திருவனந்த புரத்தில் தமிழ் வளரத் தந்து விட்டார் கவிமணி ! பொன்னையும் பொருளையும் நாடாத பொதுநல வாழ்வு
அவர் வாழ்வு !
கவிமணியை
அரசவைப் புலவராய் அமர்வு செய்ய அப்போதைய
சென்னை மாநில அரசு விரும்பியது; ஆனால் தம்மைக்
காட்டிலும் நாமக்கல் கவிஞரே அப்பதவிக்குப் பொருத்தமானவர் என்று கறி, நாமக்கல் கவிஞரை அப்பதவியில்
அமர்த்திட வழி வகுத்தவர் கவிமணி !
மறைவு:
எளிய தமிழில்
இனிய பாடல்களைத் தந்து அனைவரது நெஞ்சிலும் உயர்ந்து நின்ற கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் நாள், தமது 78 ஆம் அகவையில் இப்பூவுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !
-----------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் அறிஞர்கள்”
வலைப்பூ,.
[திருவள்ளுவராண்டு 2053:
மீனம் (பங்குனி) 18]
{01-04-2022}
-----------------------------------------------------------------------------
கவிமணி. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக