தோற்றம்:
மதுரை மாவட்டத்தில் உள்ள சிற்றுர் விளாச்சேரி. இங்கு கி.பி.1870
-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 6 –ஆம் நாள் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரிய நாராயண சாத்திரி
(சாஸ்திரி) பிறந்தார். தந்தை பெயர் கோவிந்த சிவன் சாத்திரியார். தாயார் இலட்சுமி
அம்மாள் !
தொடக்கக் கல்வி:
சிறு அகவையிலேயே, இவர் தன் தந்தையார் மூலம் வடமொழி
கற்றுக் கொண்டார். பின்பு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து தமிழும் கணிதமும் கற்றார்.
மதுரையை அடுத்த பசுமலையில் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே,
பாலகிருட்டிண நாயுடு என்பவரிடம் சிலம்பம்,
மற்போர் போன்ற கலைகளையும் கற்றுக் கொண்டார் !
பள்ளிக் கல்வி:
பின்னர், மதுரை நகரில் உள்ள உயர்நிலைப்
பள்ளியொன்றில் 1885 –ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு மகாவித்துவான் க. சபாபதி முதலியாரிடம்
தமிழ்ப் பாடம் பயின்று தமது தமிழறிவைப் பெருமளவு வளர்த்துக் கொண்டார் !
திருமணம்:
சூரிய நாராயண சாத்திரி, தனது
பத்தொன்பதாவது அகவையில் முத்துலட்சுமி என்னும் மங்கையை மணம் புரிந்து இல்லற
வாழ்வைத் தொடங்கினார். ஒரு பெண் குழந்தையும், இரு ஆண் குழந்தைகளும் இவ்விணையருக்குப் பிறந்தனர் !
கல்லூரிப் படிப்பு:
பின்னர், சென்னை வந்து, அங்குள்ள கிறித்தவக் கல்லூரியில் கலையியல் வாலை (B.A) வகுப்பில் சேர்ந்து தமிழில்
மேற்படிப்பைத் தொடங்கினார். அப்போது அங்கு கல்லூரி முதல்வராக முனைவர் வில்லியம்
மில்லர் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் சுகாட்லாந்துக் (SCOTLAND) காரர். பெரும் செல்வந்தரான வில்லியம் மில்லர், தான் ஈட்டும் வருவாயை எல்லாம் கல்விக்காகச் செலவிடுபவர். அவர் ஆங்கில
இலக்கியப் பாடம் நடத்துவதை மாணவர்கள் அனைவரும் ஆர்வமுடன் கேட்டு மகிழ்வது
வழக்கம் !
ஒருமுறை முனைவர் வில்லியம் மில்லர் தென்னிசன் (TENNYSON) எழுதிய “ஆர்தரின் இறுதி நாள்” என்ற பாடலின் பகுதியில் வரும் உவமையைப் பற்றி எடுத்துக் கூறினார். துடுப்புகள் இருபுறமும்
நீரைப் பின்னோக்கித் தள்ள, நீரில்மிதந்து போகும் படகு, பறவை தன் சிறகுகளை விரித்து விசிறியபடிக் காற்றில் நீந்திச் செல்வது
போல் உள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, இது போன்ற
உவமையை, உமது தமிழ் இலக்கியத்தில் காட்ட
முடியுமா, என்று வினவினார் !
சிறிதும் தாமதியாமல் சூரிய நாராயணன் எழுந்து “நீங்கள் போற்றும் தென்னிசன் பிறப்பதற்கு ஒன்பது நூற்றாண்டுகளுக்கு
முன்பே, எங்கள் கவிமாமன்னன் கம்பன் இந்த
உவமையைக் கையாண்டுள்ளார்” என்றார். அத்துடன், அயோத்திக் காண்டத்தில் குகப் படலத்தில் வரும்,
-----------------------------------------------------------------------------
“விடுநனி கடிது”என்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய்;
முரிதிரை
நெடுநீர்வாய்;
கடிதினின், மடஅன்னக் கதியது
செலநின்றார்
இடருற மறையோரும்
எரியுறு மெழுகானார்”
-
------------------------------------------------------------------------------
என்னும் பாடலைப் பாடிக் காட்டியவுடன் மில்லர் எழுந்து வந்து
கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார் !
பட்டப்படிப்பில் சிறப்பிடம்:
அன்றிலிருந்து சூரிய நாராயணன் மீது முனைவர் வில்லியம் மில்லருக்கு
அளவுகடந்த அன்பும் மதிப்பும் ஏற்பட்டது ! தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம்
கொண்டிருந்தவர், கல்லூரிப் படிப்பின் போது
கலையியல் வாலை (B.A) வகுப்பில் தமிழிலும், மெய்யியல் பாடத்திலும் தமிழ்நாட்டிலேயே
முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார் !
சூரியநாராயணனின் திறமையையும் புலமையையும் கண்ட முனைவர் வில்லியம்
மில்லர் அவரை அக்கல்லூரியிலேயே மெய்யியல் துறையில் ஆசிரியராகப் பணிமர்த்தம் செய்ய முடிவு செய்தார். ஆனால், தமிழின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சூரியநாராயணன், தமிழ்த் துறையில் ஆசிரியப் பணி வேண்டினார் !
பணியமர்வு:
அவரது தமிழார்வத்தைப் புரிந்து கொண்ட முனைவர் மில்லர் சென்னை,
கிறித்தவக் கல்லூரியிலேயே தமிழாசிரியராகப்
பணியமர்த்தம் செய்ததுடன், மெய்யியல் துறை ஆசிரியர் போன்று
உயர்ந்த ஊதியத்தையும் அளிக்க உத்தரவிட்டார் !
சூரிய நாராயணன் தமிழ்ப் பாடம் நடத்துகையில் மாணவர்களைப் பெரிதும்
ஈர்த்துவிடுவார். அவரது விரிவுரையில் மனம் மயங்கி மாணவர்கள் தேன் குடித்த வண்டாக
இன்புறுவர். தமிழ்ப் பாடத்தில் மனம்
ஒட்டாது கருத்தின்றி யாராவது இருந்தால் அம் மாணவரிடம் கண்டிப்புக் காட்டுவார் !
ஒருமுறை இத்தகைய மாணவர் ஒருவரைக் கண்டிக்கும் வகையில் “நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய் !
நீ இங்கிருப்பதால் உனக்கோ, பிறருக்கோ பயனிலை ! இங்கிருந்து
உன்னால் செயப்படு பொருள் யாதொன்றும் இல ! ஆதலால் வகுப்பில் இருந்து வெளியே செல்க !”
என நயம்பட உரைத்து வெளியேற்றினார் !
ஆசிரியப் பணிக்கு வருவதற்கு முன் கலாவதி (1898), உரூபாவதி என்னும் நாடக நூல்களை எழுதி, தாமே அப்பெண்களாகவும் நடித்தார். அராவ ஆண்டகை சி.வை.தாமோதரம் பிள்ளை
அவர்களால் “திராவிட சாத்திரி” எனச் சிறப்பிக்கப்பட்டார் !
எழுதிய நூல்கள்:
சூரியநாராயண சாத்திரி எழுதிய நூல்கள் உரூபாவதி, கலாவதி, மான விசயம், தனிப்பாசுரத் தொகை, பாவலர் விருந்து, மதிவாணன், நாடகவியல், தமிழ் விசயங்கள், சித்திரக் கவி விளக்கம், சூர்ப்பநகை – புராண நாடகம் ஆகியவை ! இவர் பதிப்பித்த
நூல்கள் சயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, மகாலிங்க ஐயர் எழுதிய இலக்கணச் சுருக்கம், புகழேந்திப் புலவரின் நளவெண்பா, உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத் தமிழ், தனிப் பாசுரத் தொகை ஆகிய ஐந்து நூல்கள் !
பெயர் மாற்றம்:
தமிழ்நாடெங்கும் வடமொழி புகுந்து மணிப்பவள நடை என்ற பெயரில் தமிழின் தனித் தன்மைக்கு மாபெரும் கேடு
விளைவித்து வந்த நிலையில், சூரிய நாராயணன் தமிழின் மேல் அவர்
கொண்ட அளவுகடந்த பற்றினால், தனது பெயரை வடமொழி கலவாத தூய தமிழில்
பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார் ! (சூரியன் = பரிதி; நாராயணன் = மால்; சாத்திரி = கலைஞன்).
செம்மொழி:
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, உலக மொழிகளிலேயே
தமிழ் தான் உயர்தனிச் செம்மொழி என்று உலகுக்கெல்லாம் அறிவித்து முதன் முதல்
உரக்கக் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். அதுமட்டுமன்றி வெள்ளையரால்
திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்குத் தமிழர்கள்
அடிபணியவும் கூடாது ! அடிமை ஆகவும்
கூடாது என்று ஆணித்தரமாக வாதுரை செய்தவர் பரிதிமாற் கலஞர் !
மறைவு:
இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதர் 1903 –ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் 2 –ஆம் நாள், தமது 33 –ஆம் அகவையில் மறைவுற்றார். இவரது மறைவை அறிந்த மேனாள் கல்லூரி
முதல்வர் வில்லியம் மில்லர் பின்வருமாறு எழுதினார்:-
”நான் என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகிறேன்; ஆனால் நடுஅகவை வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப் பரிதி அகன்றானே !”
வடமொழியை ஏத்திப் பிடிக்கும் பார்ப்பனர் குலத்தில் பிறந்தாலும்
பைந்தமிழின் மேல் பற்று வைத்த பரிதிமாற் கலைஞர் தமிழ்த் தாயின் தவப்புதல்வன்
என்றால் அது மிகையாகாது ! 116 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த பரிதிமாற்
கலைஞருக்கு இருந்த தமிழ்ப்பற்று இப்போது வாழும் நமக்கு இல்லையே !
------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:2053, மீனம் (பங்குனி) 12]
{26-03-2022}
பரிதிமாற் கலைஞர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக