தோற்றம்:
தமிழறிஞரான வ.அய்.சுப்ரமணியம், குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரி என்னும் ஊரில் 1926
–ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர்
அய்யம்பெருமாள் பிள்ளை. தாயார் சிவகாமி அம்மையார் !
கல்வி:
வடசேரியில் தனது தொடக்கக் கல்வியை நிறைவு செய்த சுப்ரமணியம், அங்குள்ள சிறீ மூல ராம வர்மா (S.M.R.V) இந்து உயர்நிலைப் பள்ளியில் 1941 ஆம் ஆண்டு தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். பின்பு நாகர்கோவில் சுகாட் கிறித்தவக் கல்லூரியில் இடைநிலைக் கல்வி (INTERMEDIATE) மற்றும் கலையியல் வாலை (B.A) படிப்புகளை நிறைவு செய்தார் !
சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் தமிழில் கலையியல் மேதை (M.A) படிப்பில் சேர்ந்து 1946 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக் கழகத்தில், 1957 ஆம் ஆண்டு மொழியியலில் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் இவரது சேவையைப் பாராட்டி 1983 ஆம் ஆண்டு முதுமுனைவர் (D.Lit) பட்டம் வழங்கியது !
கல்விப் பணி:
திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் 1947 ஆம் ஆண்டு தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த சுப்ரமணியம் ஆறாண்டுகள் அங்கு பணி புரிந்தார். அதையடுத்து திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தில் 1953 முதல் ஐந்தாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார் !
இப்பல்கலைக்கழகம் 1958 ஆம் ஆண்டு “கேரளப் பல்கலைக் கழகம்” எனப் புத்துரு பெற்ற போது அங்கு தமிழ் மற்றும் மொழியியல் துறை இணைப்
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராகப் பணியாற்றினார். இப்பல்கலைக் கழகத்தின்
கீழைக்கலைப் புலத்தின் முதன்மையராக (DEAN, FACULTY OF ORIENTAL LANGUAGES)
1978 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுப் பணி புரியத்
தொடங்கினார் !
துணைவேந்தர்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக 1981 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமர்வு செய்யப்பெற்ற வ.அய்.சுப்ரமணியம் 5 ஆண்டுகள் தொடர்ந்து அங்கு பணி புரிந்தார். இப்பணியிலிருந்து ஓய்வு
பெற்ற பின் ஆந்திர மாநிலம் குப்பத்தில் உள்ள திராவிடப் பல்கலைக் கழக இணைவேந்தராக 1997 முதல் 2001 வரை பணியாற்றினார் !
பிற பொறுப்புகள்:
சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சிக் கழகம், திருவனந்தபுரம் திராவிட மொழியியல் நிறுவனம், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, இந்திய மொழியியல் நிறுவனம், இந்திய
நாட்டுப்புறவியல் நிறுவனம், இந்திய இடப் பெயர் ஆய்வு நிறுவனம்,
தில்லியில் உள்ள ஞானபீட நிறுவனம், போன்ற பல்வேறு நிறுவனங்களில் இவரது பங்களிப்பு பலராலும் பாராட்டப் பெற்றது !
காலஞ்சென்ற தனிநாயக அடிகளாருடன் இணைந்து “உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்” உருவாக்கி, அதன் மூலம் உலகத் தமிழ் மாநாடுகள்
நடைபெறக் காரணமாக விளங்கினார். 1967 முதல் 1980 வரை பதின்மூன்று ஆண்டுகள்
இவ்வமைப்பின் பொதுச் செயலாளராகவும்
பொறுப்பு வகித்தார் !
படைப்புகள்:
பல துறை சார் ஆய்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர் தமிழிலும்
ஆங்கிலத்திலுமாக 150 எண்ணிக்கைக்கும் மேலாக ஆய்வுக்
கட்டுரைகள் எழுதியுள்ளார். 215 நூல்களை வெளியிட்டுள்ளார் !
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தடம் பதித்தவர்:
ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக தமிழக அரசு ஆணையிட்டு, வ.அய்.சுப்ரமணியம் அவர்களைத் துணைவேந்தராகவும் அமர்வு செய்த பிறகு, அப்பல்கலைக் கழகத்தின் கட்டடங்கள் வடிவமைப்பிலிருந்து, கல்விப்புலங்கள் (FACULTIES) உருவாக்கம் வரை ஒவ்வொன்றிலும் வ.அய்.சு அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை வெளிப்பட்டது !
”த” – “மி” – “ழ்” என்னும் மூன்று எழுத்துகளின் வடிவங்கள் பறவைப் பார்வை நோக்கில் (BIRD’S EYE
VIEW) தெரியும் வகையில் பல்கலைக் கழகக் கட்டடத்
தொகுதிகளை வடிவமைத்துக் கட்டச் செய்தது,
வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் தமிழ்ப்புலம், சுவடிப்புலம் என ஒவ்வொரு கல்விப் புலத்திற்கும் பெயர் வைத்தது, பல்கலைக் கழக வளாகம் முழுவதும் மா, பலா, நெல்லி, மருது, ஆல், அரசு, வேம்பு, வனச்சுடர், மாவிலங்கம், தில்லை, மகிழ், கருவிளம், நறுவிலி, பூவரசு, காஞ்சி, அத்தி என வகை வகையான மரங்களை
நட்டுப் பயிராக்கிச் சோலைவனமாக மாற்றியது வரை வ.அய்.சு அவர்கள் ஒவ்வொரு துறையிலும்
தடம் பதித்திருக்கிறார் !
தஞ்சையில் இவர் வடித்த சொல்லோவியம்:
தஞ்சைத் தமிழ்ப் பல்கலகத் துணைவேந்தர் பதவியிருந்து ஓய்வு பெறுகையில்
வ.அய்.சு அவர்கள் எழுதிய குறிப்பு அழகிய சொல்லோவியம் ஆகும். இதோ அவரது எழுத்துப்
பதிவு:
"இன்று (31.7.1986) மாலை 5 மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து, ஆய்வுக்காக திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப்
போலப் பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது !
கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அனைவருடன் உழைத்து
தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு
இருந்தது. இணைந்த செயல்பாடும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கிறோம் என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக்
காரணம். இவற்றுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் !
தமிழ்ப் பல்கலைக்கழகம், பிற பல்கலைக்கழகங்கள் போன்று ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவுச்சான்றோர் சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். அதைப் போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் ! என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும் !
நல்கைகள் குறையும், பொருள் முட்டுப்பாடு தோன்றி தமிழ்ப்
பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதை
ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று. இதன் வாழ்வும், வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர், அலுவலர் கையில் எப்போதும் இருக்கும் !
"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம். "அறநெறி தவறாமல்
செயல்படுவதே பெரும் அரச வெற்றி' என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும்
நமக்கு நினைவிருக்கலாம் !
தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியை தமிழர் அனைவரும், ஏன் பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல்
மாநிலத்தில் வாழ்ந்த தமிழ் மகன் என்ற முறையில், அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும்.
தளர்ச்சி இருப்பின் என் முகம் வாடும் !
அன்றுள்ள (இன்றுள்ள) பல்கலைக்கழக அலுவலர்கள் அனுமதித்தால், நான் காலமான பிறகு என் உடல் சாம்பலின் இம்மியளவைத் தஞ்சை பல்கலைக்கழக தென் வளாகத்தில் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த மரத்தடியிலும், காஞ்சி, உதகை, மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர், புதைத்திடுக ! நீங்கள் அனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்' ! என்னே அவரது சீரிய மனப்பாங்கு !
குப்பம் திராவிடப் பல்கலைக் கழகம்:
திராவிடப் பல்கலைக் கழகம் தோற்றுவிக்க நடுவணரசு முடிவு செய்து இவரை
இணைவேந்தராக அமர்வு செய்தது. திராவிடம் என்னும் சொல்லின் பொருளுக்கு ஏற்ப தமிழகம்,
கரைநாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் அணுக்கமாக அமைந்துள்ள ”குப்பம்” என்னுமிடத்தை இவர் தேர்ந்தெடுத்து,
அங்கு திராவிடப் பல்கலைக் கழகம் அமையச்
செய்தார். பெரிய நூலகம் ஒன்றை அங்கு உருவாக்கினார். பல்கலைக் கழகத்துக்கான
கட்டடங்கள் பலவற்றையும் இவரே முன்னின்று வடிவமைத்துக் கட்டச் செய்தார் !
மறைவு:
உலகம் போற்றும் தமிழறிஞராக உயர்ந்து, தமிழுக்கு அளப்பரிட பணிகளை ஆற்றிய மாபெரும் மேதை 2009 ஆம் ஆண்டு, சூன் திங்கள், 29 ஆம் நாள், தமது 84 ஆம் அகவையில் மீளாத் துயிலில் ஆழ்ந்தார். வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய
இப்பெருமகனை, தமிழ்ப் பல்கலைக் கழகப்
பேராசிரியர்களும், அலுவலர்களும், மாணாக்கர்களும் வானுறையும் தெய்வமாகவே இன்றும் மதிக்கின்றனர் !
முடிவுரை:
அனைத்து வகையிலும் நமக்கு முன்னெறியாக (ROLE MODEL) வாழ்ந்து கட்டிய வ.அய்.சு அவர்களைப் போல் நாமும் தமிழ்ப் பணி ஆற்ற
வேண்டும் என்று உறுதி ஏற்போம் ! இதுவே
அவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் அறிஞர்கள்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
16]
{30-05-2022}
------------------------------------------------------------------------------------
வ.அய்.சுப்ரமணியம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக