தோற்றம்:
புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரி
என்னும் ஊரில் 1917 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 17 –ஆம் நாள் பிறந்தவர் மாணிக்கம். தந்தையார்
பெயர் வ.சுப்பிரமணியன் செட்டியார். தாயார் பெயர் தெய்வானை ஆச்சி. பெற்றோர்
இவருக்குச் சூட்டிய பெயர் அண்ணாமலை; ஆனால்
மாணிக்கம் என்றே அனைவரும் அழைத்ததால், இப்பெயரே
இவருக்கு நிலைத்துவிட்டது !
வளர்ப்பு:
மாணிக்கம் தனது ஆறாம் அகவையில் தாயை
இழந்தார். தொடர்ந்து 10 மாதங்கள் கழித்து தனது தந்தையையும்
இழந்தார். எனவே இவரது தாய்வழிப் பாட்டனார் அண்ணாமலைச் செட்டியார்- பாட்டி மீனாட்சி
ஆச்சி ஆகியோரின் அரவணைப்பில் மாணிக்கம் வளர்ந்து வரலானார் !
பின்னர் வ.சுப.மாணிக்கம் தான் சார்ந்த
நகரத்தார் (செட்டியார்கள்) வழக்கப்படி அளகைத் தொழில் (BANKING) கற்றுக் கொள்வதற்காக பர்மா நாட்டிற்குச் சென்றார். அங்கு இரங்கூன் நகரில்
உள்ள அளகைக் கடை (BANKING
SHOP) ஒன்றில் வேலைக்குச்
சேர்ந்தார். கடை உரிமையாளர் சொல்லிக் கொடுத்தபடிப் பொய் சொல்ல மறுத்ததால், அவர் வேலையை இழந்தார். எனினும் “பொய் சொல்லா மாணிக்கம்” என்னும் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிக்
கொண்டது !
கல்வி:
தனது தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டையில்
உள்ள பள்ளியொன்றில் பெற்றிருந்த மாணிக்கம், பர்மாவிலிருந்து
நாடு திரும்பிய பிறகு தனிப்பட்ட முறையில் பயின்று பள்ளி இறுதி வகுப்புத்
தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றார். பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார் அவர்களுடன்
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் நூல்களை ஊன்றிக் கற்றார். தமிழின் மீது
அளப்பரிய நாட்டமும் ஏற்பட்டது. பண்டிதமணியின் வழிகாட்டுதலின் படி மாணிக்கம்
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் “வித்துவான்” (இளம்புலவர்) வகுப்பில் சேர்ந்து பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்
!
திருமணம்:
சிவகங்கை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள “நெற்குப்பை” என்னும் ஊரைச் சேர்ந்த ஏகம்மை என்பவரை 1945 ஆம் ஆண்டு வ.சுப.மாணிக்கம் மணந்து கொண்டார். இவ்விணையருக்கு தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி என்னும் ஆண் மகவினரும், பொற்கொடி, தென்றல் என்னும் இரு பெண் மகவினரும் பிறந்தனர்!
பட்டப்படிப்பு:
தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயின்று 1945 –ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில்
கீழைமொழிகள் வாலைப் (B.O.L)
பட்டம் பெற்றார்.
கலையியல் மேதை (M.A) பட்டத்தினை 1951 –ஆம் ஆண்டுப் பெற்றார். ”தமிழில்
வினைச் சொற்கள்’ என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக
கீழை மொழிகள் மேதை (M.O.L)
பட்டத்தையும், ”தமிழில் அகத்திணைக் கொள்கை” என்னும் பொருளில் மேற்கொண்ட ஆய்வுக்காக
முனைவர் பட்டமும் (Ph.D)
பெற்றார் !
கல்விப் பணி:
வ.சுப.மாணிக்கம் தன் கல்விப் பணியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கினார். 1941 –ஆம் ஆண்டு அங்கு தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்நது 7 ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் 1948 –ஆம் ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியேற்று 1964 வரை பதினாறு ஆண்டுகள் அங்குப் பணி புரிந்தார் !
அடுத்து காரைக்குடியில் உள்ள
அழகப்பா கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்று 1970 வரை ஆறாண்டுகள் பணி புரிந்தார். இதனை அடுத்து 1970 முதல் 1977 வரை ஏழாண்டுகள் மீண்டும் அண்ணாமலைப்
பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து தமிழ்த் துறைத் தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணி
புரிந்தார் !
துணைவேந்தர்:
இவரது தமிழ்ப் புலமையையும், ஆளுமையையும் கண்ட தமிழக அரசு இவரை மதுரை, காமராசர் பலகலைக்கழகத் துணை வேந்தராக 1979 –ஆம் ஆண்டு அமர்வு செய்தது. மூன்றாண்டுகள் மிகச் சிறப்பாகத் துணைவேந்தர் பதவியில் பணியாற்றிய வ.சு.மாணிக்கனார் 1982 –ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்!
படைப்புகள்:
”மனைவியின் உரிமை”, “கொடை விளக்கு”, “இரட்டைக் காப்பியங்கள்”, “நகரத்தார் அறப் பட்டயங்கள்”, ”தமிழ்க் காதல்”, “நெல்லிக் கனி”, “தலைவர்களுக்கு”, “உப்பங்கழி”, “ஒரு நொடியில்”, “மாமலர்கள்”, “வள்ளுவம்”, “ஒப்பியல் நோக்கு”,
“தொல்காப்பியக் கடல்”, “சங்க நெறி”, “திருக்குறட்சுடர்”,
”காப்பியப் பார்வை”, “இலக்கியச் சான்று”, “கம்பர்”, உள்பட இவர் 28 நூல்களை
எழுதி இருக்கிறார் ! தமிழக அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2006 –ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கியது !
தமிழ்த்தொண்டு:
வ.சுப.மாணிக்கம் அவர்கள் ஒரு சிந்தனையாளர்.
பழைமையையும், புதுமையையும் ஒருமித்த மனதோடு ஏற்றுப்
போற்றினார். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் முனைப்புக்
காட்டியவர். “தமிழ் வழிக் கல்வி இயக்கம்” என்ற அமைப்பை நிறுவி தமிழ் வழிக் கல்வியின்
மேன்மை பற்றித் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டார் !
ஏற்றிருந்த பிற பொறுப்புகள்:
தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ் வழில் கல்வி இயக்கத் தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழக வடிவமைப்புக் குழுத்
தலைவர், தமிழ்ப் பல்கலைக் கழகத் தொல்காப்பியத்
தகைஞர் ஆகிய பொறுப்புகளையும் பல்வேறு நேரங்களில் ஏற்றுச் சிறப்புடன் பணிபுரிந்தார்
!
விருப்பமுறி (WILL):
(01) தன் மறைவுக்குப்பின் தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கினை அறநிலையத்திற்கு வழங்க வேண்டும்!
(02) தன் பிறந்த ஊரான மேலைச் சிவபுரியில் தன் சேமிப்பிலிருந்து செலவு செய்து மருத்துவம், குழந்தைகள் நலம், நலவாழ்வு. கல்வி போன்ற பணிகளுக்குச் செலவிட வேண்டும்!
(03) தான் தொகுத்து வைத்திருந்த 4500 நூல்களையும் காரைக்குடி அழகப்பா, பல்கலைக் கழக நூலகத்திற்குத் தந்துவிட வேண்டும்!
தன் விருப்ப முறியில் மேற்கண்ட மூன்று
விருப்பங்களையும் தெரிவித்திருந்த வ.சுப.மாணிக்கனார், உண்மையிலேயே
மனிதருள் மாணிக்கம் தான் என்பதில் ஐயமில்லை !
மறைவு:
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற கொள்கைகளைப் பின்பற்றி
வந்த தமிழ்க் கடல் 1989
–ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள், 25 ஆம் நாள், தமது 72 –ஆம் அகவையில் மறைந்தது. அவர் மறைவைக் கேட்டுத் தமிழ் கூறும் நல்லுலகமே
துன்பத்தால் துவண்டு போயிற்று !
முடிவுரை:
வ.சுப.மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் மறைவு
தமிழகத்தில் நிறைவு செய்ய இயலாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது ! தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி, பொற்கொடி, தென்றல்
என்னும் அவரது மக்கட் செல்வங்களின் பெயர்களைப் பாருங்கள். இத்தகைய தமிழுணர்வு, இக்காலத் தமிழ் மக்களிடம் ஏற்பட்டால், தமிழ் வளர்ச்சி ஏறுமுகமாகும் என்பதில்
ஐயமில்லை ! வாழ்க வ.சுப.மாணிக்கனார் புகழ்
! வளர்க அவர் ஏற்றி வைத்த தமிழ் உணர்வு !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:-
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:2053,
விடை (வைகாசி) 16]
{30-5-2022}
------------------------------------------------------------------------------------
வ.சுப.மாணிக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக