தோற்றம்:
பேராசிரியர் மா.நன்னன் கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் அருகில் உள்ள சாத்துக்குடல்
என்னும் சிற்றூரில் 1924 ஆம் ஆண்டு
சூலை மாதம் 30 ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர்
மாணிக்கம். தாயார் மீனாட்சி அம்மையார். பெற்றோர் தமது குழந்தைக்கு இட்ட பெயர்
திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால், இவர் தமது
பெயரை நன்னன் என்று பின்னாளில் மாற்றிக் கொண்டார் !
கல்வி:
தனது சொந்த ஊரை அடுத்து உள்ள திருமுட்டத்தில்
8 –ஆம் வகுப்பு வரைப் படித்த நன்னன், தனது உயர்நிலைக் கல்வியைச் சிதம்பரத்தில்
தொடர்ந்தார். அங்கு புகுமுக வகுப்பு தேர்ச்சி பெற்று அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் பயின்று புலவர் பட்டம் பெற்றார் !
தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்த
நன்னன், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலையியல் வாலை
(B.A.) , கலையியல் மேதை (M.A.) ஆகிய பட்டங்களைப் பெற்றார்.
பின்பு தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து
முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார் !
ஆசிரியப் பணி:
தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்
பள்ளி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, கலைக் கல்லூரி, சென்னையில்
உள்ள மாநிலக் கல்லூரி என இவரது பணிப் புலங்கள் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே
இருந்ததன. மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்:
பின்னர் தமிழக அரசுத் துறையான
தமிழ்வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11-2-1980 முதல் 31-5-1983 வரைப் பணியாற்றித் தமிழக அரசு
அலுவலகங்களில் தமிழ்த் திட்டச் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி மேம்படுத்தினார் !
தொலைக் காட்சியில் தமிழ்ப் பணி:
சென்னைத் தொலைக்காட்சியில் ”எண்ணும் எழுத்தும்” என்ற
தலைப்பில் 17 ஆண்டுகள் ”தமிழ்
கற்பித்தல்” நிகழ்ச்சியை நடத்தி வந்தார். எழுத்துப்
பயிற்றுவித்தலில் “நன்னன் முறை” என்னும் புதிய
முறையை ஏற்படுத்தியவர். மக்கள் தொலைக் காட்சியில் “அறிவோம் அன்னை
மொழி” என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், சொற்றொடர்களை அமைக்கவும், நாள்தோறும் ”தமிழ்ப் பண்ணை” என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
காலை மணி 7-30 முதல் 8-00 வரை நடந்து வந்த இந்நிகழ்ச்சியில் இக்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை
குறைகளையும், குறை களைவுத் தீர்வுகளையும் வழங்கி வந்தார்
!
நன்னனின் இல்லம்:
பேராசிரியர் நன்னனின் மனைவி பெயர் பார்வதி.
இவர்களுக்கு ”வேண்மா”, ”அவ்வை” என இரு பெண் குழந்தைகளும் ”அண்ணல்” எனும் ஒரு ஆண்
மகவும் பிறந்தன. ”அண்ணல்” வளர்ந்து
மருத்துவக் கல்வி பயின்று மருத்துவராகப் பணியாற்றி வந்ததுடன் சில மருத்துவ
ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இக்காலத்தில் மனிதர்களை வாட்டி எடுக்கும்
மூட்டு வலிக்கான புதிய மருந்து ஒன்றை வெற்றிகரமாகக் கண்டு பிடித்த நிலையில், எதிர்பாராவகையில் இறந்து போனார் !
அண்ணல் அறக்கட்டளை:
அவர் நினைவைப் போற்றும் வகையில், நன்னன்
அவர்கள் “அண்ணல்” பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, மாணவர்களிடம்
தமிழ்ப் பற்றை வளர்க்கும் வகையில் பேச்சுப் போட்டி. கட்டுரைப் போட்டி ஆகியவற்றை
ஆண்டுதோறும் நடத்தி பரிசுகளையும் வழங்கி வந்தார் !
பெரியாரிடம் ஈடுபாடு:
பேராசிரியர் நன்னன் அவர்கள் தந்தை
பெரியாரிடம் பேரன்பு கொண்டவர். அவரது கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக் கொள்கை, கலப்புத் திருமணம், எழுத்துச்
சீர்திருத்தம், கைம்பெண் மறுவாழ்வு, மகளிர்
சமத்துவம் ஆகியவற்றை ஆதரித்து வந்தார். அத்துடன் சீர்திருத்தத் திருமணங்களை, நல்ல நேரம் பார்க்காமலும், தாலி அணிவிக்காமலும் நடத்தியும் வந்தார் !
கையூட்டு (BRIBERY) பெறுவதையும் எதிர்த்தார்; கொடுப்பதையும் எதிர்த்தார். யாருக்கும், எதற்காகவும் அன்பளிப்புத் தரக் கூடாது
என்னும் கொள்கையைப் பின்பற்றி வந்தார்.
பெற்ற விருதுகள்:
இவர் பெரியார் விருது, திரு.வி.க.விருது போன்ற பல விருதுகளையும்
பெற்றவர். பெரியாரைக் கேளுங்கள் என்னும் நூலுக்காகத் தமிழக அரசின் தமிழ்
வளர்ச்சித் தறையின் பரிசையும் நன்னன் அவர்கள் பெற்றிருக்கிறார் !
போராட்டமும் சிறை வாழ்வும்:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெள்ளையனே
வெளியேறு போராட்டங்களில் பங்கேற்றார். திராவிட இயக்க உணர்வு பெற்ற பின் தமிழிசைக்
கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆகிவற்றில் பங்கேற்று இருப்பூர்தி நிலையப்
பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளை அழித்து, சிறைத் தண்டனை
பெற்றிருக்கிறார் !
உயரிய பேச்சாளர்:
1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், குமுகாயவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியவை குறித்துப் பல
மேடைகளில் பேசி இருக்கிறார். படிப்படியாக, பெரியாரியம், பகுத்தறிவுச் சிந்தனை, மூடநம்பிக்கை ஓழிப்பு, சிக்கன வாழ்வு, பேச்சிலும்
எழுத்திலும் தமிழையே பயன்படுத்துதல், ஊடகத்
துறையில் மொழிச் சிதைவு,
குழந்தைகளுக்குத்
தமிழில் பெயர் வைத்தல் ஆகியவை குறித்தும் பேசலானார் !
படைப்புகள்:
1990 – 2010 ஆகிய காலப் பகுதியில் பேராசிரியர் நன்னன்
அவர்கள் ஏறத் தாழ 70 நூல்களை எழுதி இருக்கிறார். (01) உரைநடையா ? குறைநடையா? (02) எல்லார்க்குந் தமிழ் (03) எழுதுகோலா ? கன்னக் கோலா? (04) கல்விக்கு அழகு கசடற எழுதல் (05) கெடுவது காட்டும் குறி (06) சும்மா இருக்கமுடியவில்லை (07) கையடக்க நூல்கள் (08) செந்தமிழா ? கொடுந்தமிழா ? (09) செந்தமிழைச் செத்த மொழி ஆக்கிவிடாதீர் (10) தடம் புரள்கிறதா தமிழ் உரைநடை (11) தமிழ் உரை நடை
போகிற போக்கு (12) தமிழ் எழுத்து அறிவோம் (13) தமிழைத் தமிழாக்குவோம் I, II, III (14) தமிழியல் – தொல்
எழுத்தும் சொல்லும் – தொடருடன் (15) தவறின்றித் தமிழ் எழுதுவோம் I, II
(16) தளர்ச்சியின் கிளர்ச்சி I, II (17) திருக்குறள் மூலமும் விளக்க உரையும் (18) தொல்காப்பியம் – பேராசிரியர்
உரைத் திறன் (19) நல்ல உரைநடை எழுத வேண்டுமா ? I, II (20) நன்னன் கட்டுரைகள் (21) புதுக்கப்பட்ட
பதிப்புகள் (22) பைந்தமிழ் உரைநடை நைந்திடலாமா ? (23) வாழ்வியல் கட்டுரைகள் (24) பெரியாரைக் கேளுங்கள் I, II, III (24) பெரியாரின் புத்துலகு I, II (25) பெரியாரின் பழமொழிகள் I, Ii (26) பெரியாரின் குட்டிக் கதைகள் I, II, (27) பெரியாரின் உவமைகள் I, II (28) பெரியாரியல் 1 – 20 (29) பெரியார் அடங்கல் (30) பெரியார் பதிற்றுப் பத்து (31) பெரியார் கணினி
மற்றும் இன்னும் பல !
மறைவு:
தமிழ் தமிழ் எனத் தமிழையே தம் உயிர்
மூச்சாகக் கொண்ட அன்னப்பறவை 2017 ஆம் ஆண்டு, நவம்பர்த் திங்கள் 7 ஆம் நாள்
தனது 94 ஆம் அகவையில் இப்பூவுலக வாழ்வைத் துறந்து
மறைந்துவிட்டது !
முடிவுரை:
தமிழ் தமிழ் என்று வாழ்ந்த அறிஞர்கள் எல்லாம் கைம்மாறு கருதாமல் உழைத்து விட்டு நம்மை
விட்டு மறைந்து சென்று விட்டார்கள்.. ஆனால் தமிழ் உணர்வே இல்லாத “தமிழர்”கள் எல்லாம்
மறைந்த தமிழறிஞர்களின் பெயர்களைச் சொல்லி வாக்குகளை அறுவடை செய்ய முயன்று
கொண்டிருக்கிறார்கள். நாம் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறோம் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 07]
{21-05-2022}
------------------------------------------------------------------------------------
பேரா.மா.நன்னன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக