தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 20 மே, 2022

(21) முனைவர் மா.இராசமாணிக்கனார் - வரலாறு !


தோற்றம்:

 

முனைவர் மா.இராசமாணிக்கனார்  1907 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் நாள் ஆந்திர மாநிலம் கர்நூலில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் மாணிக்கம் பிள்ளை. அன்னை பெயர் தாயாரம்மாள் !

 

மாணிக்கம் பிளளை நில அளவைத் துறையில் பணி புரிந்ததால், அவர் ஆந்திராவில் பணிபுரிகையில், இராசமாணிக்கம் பிறந்தார். ஆந்திராவில் பிறந்தாலும், இராசமாணிக்கனார் இனத்தால் மொழியால்  தமிழர் ! மாணிக்கம்பிள்ளை தாயாரம்மாள் இனையருக்கு  ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களுள் எஞ்சியவர்கள், இராசமாணிக்கமும் அவரது அண்ணன் இராமகிருட்டிணனுமே !

 

தொடக்கக் கல்வி:

 

மாணிக்கம் பிள்ளை, வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்றுப் பல ஊர்களில் பணிபுரிந்திருக்கிறார். அவர் ஆந்திர மாநிலம் கர்நூல், சித்தூர் ஆகிய ஊர்களில்  பணிபுரிந்தமையால், இராசமாணிக்கம் நான்காம் வகுப்பு வரைத் தெலுங்கினைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றார் ! 


பின்பு, மாணிக்கம் பிள்ளை இடமாற்றலாகி மதுரை மாவட்டம் நிலக் கோட்டைக்கு வந்த பின்பே இராசமாணிக்கம் தமிழ் பயிலத் தொடங்கினார்.  மாணிக்கம் பிள்ளையின் மறைவுக்குப் பின் இராசமாணிக்கம் அவரது அண்ணன் இராமகிருட்டிணன் பாதுகாப்பில் வளர்ந்தார் !

 

பள்ளிக் கல்வி:

 

வறுமைக் காரணமாக, இராசமாணிக்கம் [ இப்போதைய திருவாரூர் மாவட்டம் ] நன்னிலத்தில் ஒரு தையற்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். பின்பு ஒருமுறை, தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரை அவர் சந்திக்க நேர்ந்தது. அவரிடம், தனது படிப்புக்கு உதவி வேண்டினார். அவர் உதவியால் இராசமாணிக்கம் அப்பள்ளியில் சேர்ந்து பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்துத் தேர்ச்சி பெற்றார் !

 

தமிழ்ப் பயிற்சி:

 

இராசமாணிக்கத்தின் படிப்பார்வத்தைக் கண்ட  கரந்தைக் கவிஞரும் ஆசிரியருமான இரா. வேங்கடாசலம், அவரைக் கரந்தை உமாமகேசுவரன் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், இரா. இராகவையங்கார் ஆகியோரிடம் அனுப்பி தமிழில் மேலும்  பயிற்சி  பெறச்செய்தார் !

 

பட்டப் படிப்பு:

 

பின்பு 1928 ஆம் ஆண்டு தமது 21 –ஆம் அகவையில் சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள தியாகராயர் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஏழு ஆண்டுகள் கழித்து 1935 ஆம் ஆண்டு, தமிழில் வித்வான்பட்டம் பெற்றார். நான்காண்டுகள் சென்றபின், 1939 ஆம் ஆண்டு கீழைமொழி வாலை (B.O.L.) பட்டம் பெற்றார் ! பெரியபுராண ஆராய்ச்சிஎன்னும் ஆய்வுக் கட்டுரை எழுதி 1945 ஆம் ஆண்டு கீழைமொழி மேதை (M.O.L) பட்டம் பெற்றார். 1951 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார் !

 

முற்போக்குச் சிந்தனையாளர்:

 

இவரது இளமைக் காலத்தில் சித்தர் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருவருட்பா போன்றவைகளை ஆழ்ந்து படித்தார். அதன் விளைவாக இவரிடம் தன்மானச் சிந்தனைகள் (சுயமரியாதை) மேலோங்கி நின்றன. சாதி ஒழிப்பு பற்றிப் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். வேள்வித் தீவளர்த்து சடங்குகள் செய்து மந்திரம் சொல்லித் திருமணங்கள் நடத்தப்படுவதை ஏற்க மறுத்தார் ! அதற்காகவே தமிழர் திருமணம்என்னும் முற்போக்குச் சிந்தனைகள் அமைந்த நூலை எழுதி, தன்மானத் திருமணங்களை வரவேற்றார் !

 

தமிழ்ப் பேராசிரியர்:

 

சென்னை விவேகானந்தர் கல்லூரியில் 1947 முதல் 1953 வரை  தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இராசமாணிக்கனார் 1951 ஆம் ஆண்டு சைவ சமய வளர்ச்சிபற்றி ஆய்வு செய்து முனைவர்பட்டம் பெற்றார்.  பிறகு,  1953 ஆம் ஆண்டில் மதுரை தியாகரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுத் துறைத் தலைவராகவும் விளங்கினார் !

 

தமிழ்த் துறைத் தலைவர்:

 

பின்பு 1959 தொடங்கி 1967 வரை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பணியாற்றினார் ! 1966 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் பங்கேற்று சங்க காலத் தமிழ்ச் சமுதாயம்என்னும் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார் !

 

திருமண வாழ்வு:

 

இராசமாணிக்கம் 1930 -ஆம் ஆண்டு தனது 23 ஆம் அகவையில் கண்ணம்மாள் என்னும் மங்கையை மணந்தார். இவ்விணையருக்குப் பிறந்த குழந்தைகளுள், கலைக்கோவன் என்பவர் திருச்சியில் கண் மருத்துவராகவும், ”மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையஆட்சியராகவும் இருந்து வருகிறார் !

 

சிறப்புப் பட்டங்கள்:

 

சைவசித்தாந்தம் குறித்த இவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும்  பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் திருவாவடுதுறை மடத்தின் தலைவர்  இவருக்கு சைவ வரலாற்று  ஆராய்ச்சிப் பேரறிஞர்என்னும் பட்டத்தை வழங்கினார். மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடமிருந்து ஆராய்ச்சிக் கலைஞர்என்னும் பட்டத்தைப் பெற்றார்.  தருமபுரம் மடத்தின் தலைவர் சைவ இலக்கியப் பேரறிஞர்என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப்படுத்தினார் !

 

படைப்புகள்:

 

இராசமாணிக்கனார், தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம் போன்ற பல துறைகளில் ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார். (01) பல்லவர் வரலாறு, (02) பல்லவப் பேரரசர், (03) மொகஞ்சதாரோ அல்லது சிந்து வெளி நாகரிகம், (04) தமிழக வரலாறும் பண்பாடும், (05) தமிழ் மொழி இலக்கிய வரலாறு, (06) சோழர்வரலாறு, (07) தமிழ் இனம், (08) தமிழக ஆட்சி !


(09) தமிழ் அமுதம், (10) தமிழ் நாட்டு வட எல்லை, (11) தமிழகக் கலைகள், (12) புதிய தமிழகம், (13) சிலப்பதிகாரக் காட்சிகள், (14) சேக்கிழார், (15) சேக்கிழார் ஆராய்ச்சி, (16) சைவ சமயம், (17) சைவ சமய வளர்ச்சி (18) பெரிய புராண ஆராய்ச்சி (19) நாற் பெரும் புலவர்கள் (20) பத்துப் பாட்டு ஆராய்ச்சி  எனப் பல நூல்களை எழுதியிருக்கிறார் !

 

மறைவு:

 

பல வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டு, உண்மையான நிகழ்வுகளை வெளிக் கொணர்ந்த முனைவர் மா.இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகையில் 1967 ஆம் ஆண்டு, மே மாதம், 26 ஆம் நாள், தமது 60 ஆம் அகவையில் காலமானார் !

 

முடிவுரை:

 

தமிழன்னை வரலாற்று ஆய்வறிஞர் ஒருவரை இழந்தாள் ! இவருக்குப் பின் இத்தகைய ஆய்வறிஞர்கள் தமிழகத்தில் தோன்றாதது நமது தவக்குறையே !

 

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 06]

{20-05-2022}

-----------------------------------------------------------------------------------

முனைவர். மா.இராசமாணிக்கனார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக