தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 9 ஏப்ரல், 2022

(07) திரு.வி.கலியாணசுந்தரனார் - வரலாறு !

தோற்றம்:

 

காஞ்சிபுரம் மாவட்டம் துள்ளம் (தண்டலம்) என்னும் சிற்றூரில் 1883 –ஆம்  ஆண்டு ஆகத்து மாதம் 26 –ஆம் நாள் திரு.வி.கஎன அன்போடு அழைக்கப்படும் திரு. கலியாணசுந்தரம் பிறந்தார். தந்தை பெயர் விருத்தாசல முதலியார். தாயார் சின்னம்மை. இவ்விணையருக்கு ஆறாவது மகனாகப் பிறந்த கலியாண சுந்தரத்தின் முன்னோர் திருவாரூரைச் சேர்ந்தவர்கள் !

 

கலியாண சுந்தரத்தின் தந்தை விருத்தாசல முதலியார், இலக்கியப் பயிற்சியும், இசைப் பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவரது முதல் மனைவி பச்சையம்மாள் இறந்த பின் சின்னம்மை என்பவரை மணந்து கொண்டார். சின்னம்மைக்குப் பிறந்த ஆறு குழந்தைகளுள் இறுதியாகப் பிறந்தவர் கலியாணசுந்தரம் !

 

கல்வி:

 

கலியாணசுந்தரம் தொடக்கத்தில்  தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் உள்ள  இராயர்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார்.  அதன் பின்னர் தனது 11 –ஆம் அகவையில் வெசுலீ பள்ளியில் (1894 –ஆம் ஆண்டு) நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு கையும் ஒரு காலும் முடங்கின. இதனால் அவரது படிப்பு சில காலம் தடைப்பட்டது ! படிப்பில் நல்ல திறமையுடன் விளங்கிய கலியாணசுந்தரம் 6 –ஆம் படிவத் தேர்வு (OLD S.S.L.C) எழுத முடியாமற் போயிற்று. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிவுக்கு வந்தது !

 

தமிழ்ப்புலமை:

 

அவரது 21 ஆம் அகவையில் வெசுலீ பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளை என்ற தமிழ் அறிஞரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். தமிழ் நூல்களை அவரிடம் முறையாகப் பயின்று நல்ல புலமை பெற்றார் ! கதிரைவேற் பிள்ளை மறைவுக்குப் பின், மயிலைத் தணிகாசல முதலியாரிடம் பாடம் கேட்டு, தன் தமிழ்ப் புலமையை மேலும் மெருகேற்றிக் கொண்டார் !

 

பணி:

 

கலியாண சுந்தரம், தமது 23 –ஆம் அகவையில், (1906 ஆம் ஆண்டு) ஆங்கிலேயர் நிறுவனமான பென்சரில் (SPENSOR) கணக்கராகப் பணியில் சேர்ந்தார். திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சியில் ஈடுபாடு கொண்டதால், வேலையை விட வேண்டியதாயிற்று. பின்பு ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த வெசுலியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றினார் !

 

திருமண வாழ்வு:

 

1909 –ஆம் ஆண்டில், கலியாண சுந்தரத்தின் 26 -ஆம் அகவையில் அவருக்குத் திருமணம் ஆயிற்று. இரண்டு குழந்தைகளும் பிறந்தன.  ஆனால், திருமணமான ஒன்பது  ஆண்டுகளுக்குள் அவர் தன் மனைவியையும்  மக்களையும்  இழந்து மீண்டும் தனி மரமானார் ! அதைத் தொடர்ந்து வெசுலீ கல்லூரியில் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஆனால், நாட்டு விடுதலை உணர்வு அவரிடம் மேலோங்கி  இருந்ததால், தலைமை ஆசிரியர் பணியைத் துறந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார் !

 

இதழாசிரியர்:

 

தேசபக்தன் என்னும் செய்தி இதழில் ஆசிரியராகச் சேர்ந்து, விடுதலை உணர்வு நாட்டு மக்களிடம் பரவச் செய்ய முனைப்பாகப் பணியாற்றினார். தொடர்ந்து திராவிடன், நவசக்தி போன்ற இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றி  நாட்டு விடுதலைக்காக உழைத்தார் !

 

தொழிற்சங்கப் பணி:

 

செய்தியிதழ்ப் பணிகளை அடுத்து, தொழிற் சங்கத்தைத் தோற்றுவித்து தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். தொழிற்சங்கப் பணிகளில் பல்லாண்டு காலம் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கலியாணசுந்தரம், மேடைப் பேச்சுகளிலும் ஈடுபாடு காட்டினார். விரைவிலேயே தலைசிறந்த தமிழ்ச் சொற்பொழிவாளராக புதிய வடிவம் எடுக்கத் தொடங்கினார்!

 

பேச்சாற்றல்:

 

சிறந்த மேடைப் பேச்சாளரான கலியாணசுந்தரம் தமிழக மக்களால் கலியாணசுந்தரனார்என்றும் திரு.வி.கஎன்றும் போற்றப் பெறலானார்.  அவரது முன்னோரின் சொந்த ஊரான திருவாரூர் என்பதை அவருடைய பெயருடன் இணைத்து திருவாரூர் விருத்தாசல முதலியார் கலியாணசுந்தரம் என்பதைச் சுருக்கி திரு.வி.கஎன்று மக்கள் அன்புடன் அழைக்கலானார்கள் ! திரு.வி.க. அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும்  ஈடுபாடு கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார் !

 

எழுதிய நூல்கள்:

 

திரு.வி.க எழுதிய நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 39 ஆகும். இவையன்றி 15 கவிதைத் தொகுதிகளும், பயண நூல் ஒன்றும் எழுதியுள்ளார்.  திரு.வி.க. எழுதிய நூல்களில் மிகவும் புகழ் பெற்ற நூல்கள் முருகன் அல்லது அழகு”, “ஆலமும் அமுதும்” “உள்ளொளி”, “பெண்ணின் பெருமை”, “சைவத் திறவு”, “தமிழ்க் கலைஆகியவை !

 

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வினை எழுத முடியாமல் படிப்பைக் கைவிட்ட  திரு.வி.க. 39 நூல்களையும் 15 கவிதைத் தொகுதிகளையும் ஒரு பயணக் கட்டுரை நூலையும் படைக்க முடிந்தது என்றால், அதற்கு அவரது தமிழ்ப் புலமையும் உழைப்பும் அன்றோ காரணம் ! சிறந்த மேடைப் பேச்சாளராக எப்படி அவரால் மிளிர முடிந்தது ? செய்தி இதழ் ஆசிரியராக எப்படிப் பணியாற்ற முடிந்தது ? தமிழ் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வமன்றோ  இவற்றுக்கெல்லாம் அடிப்படை நிலைக்களம் !

 

மறைவு:

 

இத்தகைய பன்முக ஆற்றல் பெற்ற அறிஞர், “தமிழ்த் தென்றல்என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் பெற்ற  திரு.வி.க. அவர்கள், 1953 –ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் தமது 70 –ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

முடிவுரை:

 

சொக்கவைக்கும் தமிழ்ப் பேச்சால் கூட்டத்தினரைக் கட்டிப் போட்ட  திரு.வி.க எந்தக் கல்லூரியில் படித்தார் ? ”தமிழ்த் தென்றல்என்று அறிஞர்களால் போற்றப் பெற்ற திரு.வி.க. அவர்களின் சாதனைகளைத் தொட வேண்டும் என்னும் ஊக்க உணர்வு நம்மிடம் இருக்கிறதா ?

 

இறைக்க இறைக்கத் தான் ஊருணி சுரக்கும் ! சுடச் சுடத் தான் பொன் ஒளிரும் ! காய்ச்சக் காய்ச்சத் தான்  பாலின் சுவை கூடும் ! நிரம்பவும் எழுத எழுதத் தான் நமது எழுத்து வளம் பல்கிப் பெருகும் ! நமது எழுத்தாற்றல் பெருக நாம் எதுவுமே செய்வதில்லையே ! மடிமை உணர்வு நம்மைச் சுற்றி வளைத்து  அடிமைப் படுத்தி விட்டதோ ?

 

திரு.வி.க போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்த பின்பும் நமது எழுத்துத் துறை  மேம்பாட்டில் அக்கறை செலுத்தா விட்டால், விழியிருந்தும் நாம் குருடர்களாகி விடுவோம் !  நாம் குருடர்களாகத் தான் இருக்க வேண்டுமா ?

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

[தி.ஆ:2053, மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

-------------------------------------------------------------------------------


திரு.வி.கலியாணசுந்தரனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக