தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 11 ஏப்ரல், 2022

(08) மறைமலை அடிகள் - வரலாறு !


தோற்றம்:

 

மறைமலை அடிகள் 1876 –ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 ஆம் நாள் நாகப்பட்டினம் நகரத்தில் உள்ள காடம்பாடி என்னுமிடத்தில் பிறந்தார். தந்தை பெயர் சொக்கநாத பிள்ளை. தாயார் சின்னம்மையார். பெற்றோர் இவருக்கு இளமையில் சூட்டிய பெயர் வேதாச்சலம் ! தனித் தமிழ்ப் பற்றின் காரணமாக, வேதாச்சலம், பின்னாளில் (1916 -ஆம் ஆண்டு)  தமது பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார் !

 

பள்ளிக் கல்வி:

 

தந்தை சொக்கநாத பிள்ளை நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மறைமலை, நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் (ஒன்பதாம் வகுப்பு) வரைப் படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாகப் பின்னர்ப் படிப்பைத் தொடர முடியவில்லை !

 

மொழிப் புலமை:

 

நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவர் தமிழ்ப் புலமை மிக்கவர். அவரிடம் மறைமலை, தமிழை ஐயம் திரிபறக் கற்றார். அதுபோன்று சோமசுந்தர நாயகர் என்பவரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். தனது சொந்த முயற்சியால், தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்தார். அத்துடன் ஆங்கிலம், வடமொழி இரண்டையும் கற்று அவற்றிலும் புலமை பெற்றார் !

 

இல்லற வாழ்வு:

 

மறைமலைக்கு இளம் அகவையிலேயே திருமணம் நிகழ்ந்தது. மனைவி பெயர் சௌந்தரவல்லி அம்மை. அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர் தம்முடைய பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்ற பிள்ளைகளின் வடமொழிப் பெயர்களை மாற்றித் தனித் தமிழ்ப் பெயர்களாகச் சூட்டினார். (01) அறிவுத் தொடர்பு (திருஞானசம்பந்தம்) (02) மணிமொழி (மாணிக்க வாசகம்) (03) அழகுரு (சுந்தரமூர்த்தி) (04) முந்நகரழகி (திரிபுரசுந்தரி) ஆகியோர் அவரது ஏனைய குழந்தைகள் !

 

முதல் நூல்:

 

மறைமலை தமது 22 –ஆவது அகவையில் கடும் சூலை நோயால் துன்பமுற்றார்.  அப்போது திருவொற்றியூர் முருகன் மீது அன்பு கொண்டு பாடிய மும்மணிக் கோவைஅவரது தமிழாற்றலை வெளிப்படுதுவதாக அமைந்தது. அதில் இடம்பெற்றுள்ள புலவர் ஆற்றுப் படைஎன்னும் பாடல் நீண்ட ஆசிரியப் பாவினால் யாக்கப் பெற்றுள்ளது !

 

தமிழாசிரியர் பணி:

 

சென்னைக்கு வந்த பின்பு, கிறித்தவக் கல்லூரியில், பரிதிமாற் கலைஞருடன் இணைந்து அக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பல ஆண்டுகள் பணிபுரிந்த பின், வடலூர் இராமலிங்க அடிகள் கொள்கைப்படி  1912 ஆம் ஆண்டு சமரச  சுத்த சன்மார்க்க சங்கம்தொடங்கினார். பின்னர், தனித் தமிழ் ஈடுபாட்டால், அதனைப் பொதுநிலைக் கழகம்  எனப் பெயர் மாற்றினார் !

 

நூல் நிலையம்:

 

சென்னை பல்லவபுரம் நகரில் திருமுருகன் அச்சுக் கூடத்தை உருவாக்கி, பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல் நிலையத்தை உருவாக்கி அதில் பல தமிழ் நூல்களை இடம் பெறச் செய்தார் !

 

மொழிக் கலப்பு:

 

மொழிக் கலப்பு, தமிழ்மொழிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் நம்பினார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் முனைப்பாகக் கருத்தைச் செலுத்தினார் !

 

இந்தி எதிர்ப்பு:

 

1937 –ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகள் தலைமை தாங்கினார். இந்தி பொது மொழியா ?” என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டார் !

 

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் நடந்த மறியலில் அவருடைய மகன் மறை.திருநாவுக்கரசு ஈடுபட்டார். அதை  மறைமலை அடிகள் ஊக்குவித்து மகனை வாழ்த்தினார். இப்போராட்டத்தில் மறைமலை அடிகளுக்குச் சிறைத் தண்டனை அளிப்பட்டது. சிறையிலிருந்து வெளி வந்த பின்பு நூல்கள் எழுதுவதிலும் அவற்றை வெளியிடுவதிலும்  கருத்தைச் செலுத்தினார் !

 

துறவற வாழ்வு:

 

மறைமலை அடிகள் 1911 –ஆம் ஆண்டு தம் 35 ஆம் அகவையில் துறவற வாழ்வை மேற்கொண்டு ஒழுகலானார். இதனால் வேதாச்சலம் என்னும் பெயர் சுவாமி வேதாச்சலம் ஆகி, பின்னர் மறைமலை அடிகளாகத் தமிழ் மக்களிடையே நிலைபெற்றுவிட்டது !

 

நூல்கள் படைப்பு:

 

இலக்கியம், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, மெய்யியல், வரலாறு, குமுகாயவியல் எனப் பல வகைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதித் தமிழுலகிற்கு அளித்துள்ளார். (01) பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை (02) முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை (03) திருவொற்றியூர் முருகன் மும்மணிக் கோவை !


(04) சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (05) சிந்தனைக் கட்டுரைகள் (06) இளைஞர்க்கான இன்றமிழ் (07) சிறுவர்க்கான செந்தமிழ் (08) முற்கால, பிற்காலத் தமிழ்ப் புலவோர் (09) கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா ! (10) சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் ஆகியவை அவர் எழுதியுள்ள தனித் தமிழ் நூல்களிள் சில !

 

அவர் எழுதிய மேலும் சில நூல்கள் (11) சைவசித்தாந்த ஞான போதம் (12) தமிழர் மதம் (13) திருவாசக விரிவுரை (14) சிவஞானபோத ஆராய்ச்சி (15) மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் I, II  (16) சோமசுந்தர நாயகர் வரலாறு (17) வேளாளர் நாகரிகம் (18) பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (19) மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை I, II (20) பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ! 


(21) மரணத்தின் பின் மனிதர் நிலை (22) யோகநித்திரை அல்லது அறிதுயில் (23) தொலைவிலுணர்தல் (24) கோகிலாம்பாள் கடிதங்கள் (25) குமுதவல்லி நாகநாட்டரசி (26) சாகுந்தல நாடகம் (27) சாகுந்தல நாடக ஆராய்ச்சி (28) பாமணிக் கோவை, மற்றும் இவை போன்று பல !

 

தனித் தமிழ் இயக்கம்:

 

மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழ் அறிஞர், ஆய்வாளர், தமிழையும், வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை வடமொழிக் கலப்பின்றித் தூய நடையில் எழுதியதுடன் பிறரையும் அவ்வாறு எழுத ஊக்குவித்தவர். 1916 ஆம் ஆண்டு தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித் தமிழ் இயக்கத்தின் மூல வித்துகள். சைவத் திருப்பணியும் சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர் அடிகளார் !

 

மறைவு:

 

தனித்தமிழ் இயக்கக் கனலைத் தமிழகமெங்கும் ஊதி வளர்த்த மறைமலை அடிகளார் 1950 –ஆம் ஆண்டு, செப்டம்பர்த் திங்கள் 15 –ஆம் நாள் தமது 74 –ஆம் அகவையில் தம் உயிரைத் தமிழர்களின் காலடியில் வைத்து விட்டு, இப்பூவுலக வாழ்வை நீத்தார் !

 

முடிவுரை:

 

தனித்தமிழ், தனித் தமிழ் என்று தாம் வாழ்நாளெல்லாம்  பாடிப் பறந்த இந்தத் தமிழ்க் குயிலுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ? அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் வகையில் நமது பேச்சிலும் எழுத்திலும் பிறமொழிக் கலப்பைத் துப்புரவாக விடுத்து, தனித் தமிழைக் கையாள்வதே நமது செயலாக இருக்க வேண்டும் ! இனி, தமிழிலேயே பேசுவோம்; தமிழிலேயே எழுதுவோம்; தமிழ்ப் பெயர்களையே குழந்தைகளுக்கு வைப்போம் ! இதுவே மறைமலை அடிகளாருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும் ! வாழ்க அடிகளாரின் புகழ் !

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்  அறிஞர்கள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28]

{11-04-2022}

--------------------------------------------------------------------------------


மறைமலையடிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக