தோற்றம்:
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க
அடிகள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் நாள் கடலூர் மாவட்டம் மருதூர் என்னும்
சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் இராமையாப் பிள்ளை. தாயார் சின்னம்மையார் !
இடப்பெயர்வு:
இராமலிங்கம் பிறந்த ஆறாம் மாதத்திலேயே அவரது தந்தையார்
மறைந்து போனார். கணவரை இழந்த சின்னம்மையார், தான் பிறந்து
வளர்ந்த சிற்றூரான சின்னக் காவணத்திற்கு தம் குழந்தைகளுடன் சென்று வாழ்ந்து
வரலானார். சென்னையை அடுத்து உள்ள பொன்னேரிக்கு அருகில் உள்ளது சின்னக் காவணம்.
பின்னர் அவரது குடும்பம் சென்னையில் ஏழு கிணறு பகுதியில் குடியேறியது !
கல்வி:
இராமலிங்கம் பள்ளிப் பருவம் எய்தியதும், அவரது மூத்த தமையனார் சபாபதி, தாமே கல்விப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் தான் பயின்ற ஆசிரியராகிய
காஞ்சிபுரம் மகா வித்வான் சபாபதி அவர்களிடம் கல்வி கற்க அனுப்பி வைத்தார்.!
இளமையிற் புலமை:
சிறுவனாக இருக்கும் போதே, பாடல்கள் எழுதும் திறனை இராமலிங்கம் பெற்றிருந்தார். ஒருநாள் ஆசிரியர் பாடம் நடத்துகையில், ”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் !, ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் !’ என்று சொல்லிக் கொடுத்தார். அதனைக் கேட்ட
இராமலிங்கம், ஐயா, ”வேண்டாம், வேண்டாம்” என்று
எதிர்மறைக் கருத்துடைய இப்பாடலைப் பாட
மனம் ஒப்பவில்லை” என்று கூறினார் !
தெய்வக் குழந்தை:
”அப்படியானால் நீயே ஒரு பாடலை கூறு” என்றார் ஆசிரியர். உடனே இராமலிங்கம் எழுந்து “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று “வேண்டும்” ”வேண்டும்” என்று நேர்மறையான கருத்து உடைய பாடலைப் பாடினார். அதைக் கேட்ட ஆசிரியர் வியப்பால் சிலையாகிப் போனார் !
”இராமலிங்கம் !
நீ வாலாயமான (சாதாரணமான) குழந்தை இல்லை ! தெய்வக் குழந்தை ! உன்னிடம் தெய்வம்
குடிகொண்டிருக்கிறது ! உனக்குப் பாடம் சொல்லித் தரும் தகுதி எனக்கில்லை !” என்று கூறி அவருக்குக் கற்பிக்கும்
பணியிலிருந்து விலகிக் கொண்டார்!
பாடல் புனைவு:
அன்றிலிருந்து திண்ணைப் பள்ளிக்குச்
செல்லாமல், சென்னையில் உள்ள கந்தகோட்டத்து முருகனை
நாள்தோறும் வழிபட்டு, அங்கேயே முருகன் மீது பாடல்களையும் இயற்றிப்
பாடலானார் !
பள்ளிக்குச் செல்லாத பாவலர்:
இராமலிங்கம் வேறு எந்தப் பள்ளிக்கும்
சென்றதில்லை. எந்த ஆசிரியரிடத்தும் பாடம் கேட்டதில்லை. இறைக்க இறைக்க ஊறும் ஊருணி
போலப் பாடல்கள் இராமலிங்கம் நாவிலிருந்து சுரந்து பொழியத் தொடங்கியது இதை இராமலிங்க அடிகள் சில பாடல்கள் வழியாகவே வெளிப்படுத்தி உள்ளார் !
வடலூர் வருகை:
தென்னாட்டில் உள்ள பல புகழ் பெற்ற
திருத்தலங்களுக்குச் சென்று வந்த பின் இறுதியாக பார்வதிபுரத்தை அடுத்த கருங்குழி
என்னும் ஊரில் தங்கினார் ! 1827 -ஆம் ஆண்டு
பார்வதிபுரத்தின் அருகிலுள்ள வடலூரில் தனித் தன்மை வாய்ந்த எண்கோண வடிவமுள்ள
மன்றத்தைக் கட்டி முடித்தார். அதன் வழிபாட்டு முறைகள் மற்றக் கோயில்களிலிருந்து
வேறு பட்டவையாகும் !
துறவி:
இறைக் கொள்கை மீதும் இனிய தமிழ் மீதும்
பற்றுக் கொண்ட இராமலிங்கம் இல்லற வாழ்வை நாடாமல் துறவற வாழ்க்கையை மேற்கொண்டார்.
அவருடைய எளிய துறவற வாழ்வு,
அருட்கொள்கை, பிற உயிர்களிடத்து அன்புடைமை, உயிர்ப் பலி நீப்பு ஆகிய கொள்கைகளால் கவரப்
பெற்ற மக்கள் அவரை இராமலிங்க அடிகள் என அன்புடன் அழைக்கலாயினர். !
பசிப்பிணி நீக்கல்:
மக்களின் துன்பங்களிலெல்லாம் பெருந்துன்பம்
பசியே என்பதை உணர்ந்த அடிகளார் பசிப் பிணியைப் போக்கிட 1867 ஆம் ஆண்டு
வடலூரில் தருமசாலையைத் தொடங்கி, அங்கு
வருபவர்க்கெல்லாம் மூன்று வேளையும் உணவளிக்கும் திட்டத்தைத் செயல்படுத்தி வரலானார்
!
வள்ளலார்:
மக்களின் பசிப்பிணிக்கு மருந்து கொடுத்துத்
தணிக்கும் வகையில் “தருமசாலை”யைத் தொடங்கி
உணவளித்த இராமலிங்க அடிகள், அதன் பின்பு “வள்ளலார்” என்றே மக்களால் அழைக்கப்பட்டார். இத்திட்டம் 152 ஆண்டுகளாக இன்றுவரைத் தொடர்ந்து வடலூரில் நடைபெற்று வருகிறது என்பது தமிழ்
நாட்டில் உள்ள பலருக்கு இன்னும் தெரியாத செய்தியாகும் !
பன்முகச் செல்வர்:
வள்ளலார் அருளாசிரியர், இதழாசிரியர், இறையன்பர், உரையாசிரியர், குமுகாயச்
சீர்திருத்தச் செம்மல், சித்த மருத்துவர், சொற்பொழிவாளர், நூலாசிரியர், எனப் பன்முகத்
தன்மை கொண்டவர் !
இறைவனின் வடிவு:
இறைவன் ஒருவனே, அவன் ஒளி
வடிவானவன் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார் ! ஒளியே கடவுள் என்பதால் உருவ
வழிபாட்டை வள்ளலார் ஏற்க வில்லை !
------------------------------------------------------------------------------------
”நலிதரு சிறிய தெய்வமென்று ஐயோ
.........நாட்டிலே பலபெயர் நாட்டி,
பலிதர ஆடுபன்றிக் குக்குடங்கள்
.........பலிகடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
........புத்தி நொந்து உளம் நடுக்குற்றேன்”
------------------------------------------------------------------------------------
என்னும் வள்ளலார் சிறு தெய்வ வழிபாடு என்று
சொல்லி, உயிர்ப்பலி கொடுப்பதைக் கடுமையாக
எதிர்த்தார் !
அருளுள்ளம் கொண்ட அறிஞன்:
-----------------------------------------------------------------------------------
வாடிய
பயிரைக் கண்டபோ தெல்லாம்
.........வாடினேன் பசியினால் இளைத்தே,
வீடுதோறும்
இரந்தும் பசியறாது அயர்ந்த
.........வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் !
------------------------------------------------------------------------------------
என்று அடுத்தவர் துன்பம் கண்டு மனம் பதறிய
மாமனிதர் வள்ளலார் !
------------------------------------------------------------------------------------
இருட்சாதி
தத்துவச் சாத்திரக் குப்பை
.........இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
..........வழக்கெலாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டு
------------------------------------------------------------------------------------
என்று சாதி, சமய சாத்திரப்
பித்தர்களுக்குச் சாட்டையடி கொடுத்தவர் வள்ளலார் !
திருவருட்பா:
வள்ளலார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட
பாடல்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளித்த கொடை வள்ளல். இனிமை ததும்பும் ”தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து
ஒன்றாய்க் கூட்டி” என்பன போன்ற பாடல்களல்லாமல், உயிர்க் கொலையை விட்டிடுக என்று வேண்டும்
பாடல்கள், மதங்களை விட்டொழித்திடுக என்று
சீர்திருத்தக் கருத்துகள் அடங்கிய பாடல்கள், பெண் பித்துப்
பிடித்து அலையாதீர் என்று அறிவுரை நல்கும் பாடல்கள், பார்த்துப்
பார்த்து வளர்க்கும் உடலை,
இறப்புக்குப் பின்
எரிக்காதீர், நிலத்திற்குள் அடக்கம் செய்க என்று வேண்டும்
பாடல்கள் என அவர் பாடாத பொருளில்லை; பேசாத கருத்தில்லை !
மறைவு:
சாதி சமய வேறுபாடுகளை நீக்குங்கள் ! அனைத்து
மனிதர்களும் சமம் ! ஒருவர்க்கொருவர் அன்பு கொண்டு வாழுங்கள் ! என்று குழைவான
தமிழ்ச் சொல்லில் கொள்கைப் பொழிவு செய்த அருட்சித்தரான , வள்ளலார், 1874 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 30 ஆம் நாள் தமது 51 ஆம் அகவையில்
ஒரு அறைக்குள் சென்று, உட்புறம் பூட்டிக் கொண்டு மறைந்து விட்டார்
என்பது சில ஆன்மிக மனிதர்கள் சொல்லும் அடிப்படை இல்லாத வரலாறு ! ஆனால் அதை அறவே
ஏற்காத மனிதர்களும் இன்னும் நூறாயிரக் கணக்கில் இருக்கவே செய்கின்றனர் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 02]
{16-05-2011}
-----------------------------------------------------------------------------------
வள்ளலார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக