தோற்றம்:
பாரதிதாசன் 1891 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 –ஆம் நாள் (128 ஆண்டுகளுக்கு முன்பு) புதுச்சேரியில்
பிறந்தார். தந்தை பெயர் கனக சபை. தாயார் இலக்குமி. பாரதிதாசனுக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர்
சுப்புரத்தினம் !
கல்வி:
ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் தொடக்கக் கல்வி பயின்ற
சுப்புரத்தினம் இளமையிலேயே தமிழார்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தனது 16
–ஆம் அகவையில் கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமை
வகுப்பில் சேர்ந்தார். அவ்வகுப்பில் கல்லூரியிலேயே முதலாவது மாணவராகத் தேர்வு
பெற்றார் !
ஆசிரியப் பணி:
காரைக்காலை அடுத்த நிரவி என்னும் ஊரில் 1909 –ஆம் ஆண்டு,
தனது 18 –ஆவது அகவையில் தமிழ் ஆசிரியராகப் பணியேற்றார். இயல்பாகவே
தமிழின்மீது ஈடுபாடும், பற்றும் கொண்டிருந்த சுப்புரத்தினம் ஆசிரியப் பணியில் சிறந்து
விளங்கினார். மாணாக்கர்களுக்குத் தமிழார்வத்தையும் தமிழுணர்வையும் ஊட்டித் தமிழ்
கற்பித்தார் !
விடுதலை ஈடுபாடு:
1908 –ஆம் ஆண்டு பாரதியார் – சுப்புரத்தினம்
சந்திப்பு புதுவையில் நிகழ்ந்தது. சுப்புரத்தினம் பாரதிதாசனாக எழுச்சி பெறுவதற்கு
இந்தச் சந்திப்பு வித்தூன்றியது.
1910 –ஆம் ஆண்டு, நாட்டு விடுதலை இயக்கத்தில்
ஈடுபட்டிருந்த பாரதியார், வ.வே.சு., வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம்
அளித்தல், உணவு அளித்தல், இயன்றபோது பண உதவி செய்தல் ஆகிய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டார் ! கைந்நூல் (கதர்) ஆடைகளை ஊர் ஊராகச் சுமந்து சென்று விற்பனை செய்வதில் முழு மூச்சாக ஈடுபட்டார் !
தந்தை மறைவு:
சுப்புரத்தினத்தின் தந்தையார் 1916 –ஆம் ஆண்டு மறைந்தார். தந்தையார் மறைவு அவரை மிகவும் சோர்வடையச்
செய்தது. சோர்விலிருந்து மீள்வதற்கு பாடல் புனைவு அவருக்குக் கைகொடுத்தது !
பெயர் மாற்றம்:
பாரதியின் பாடல் வரிகளில் மனதைப் பறிகொடுத்த “பாரதிதாசன்” எழுச்சி மிக்க பாடல்கள் பலவற்றைப்
படைக்கத் தொடங்கினார் ! பாரதியாரின் மீது
கொண்ட அளவற்ற ஈடுபாட்டின் காரணமாக, 1918 -ஆம் ஆண்டு
சுப்புரத்தினம் என்னும் தனது
பெயரையும் “பாரதிதாசன்” என்று மாற்றிக் கொண்டார் !
திருமணம்:
பாரதிதாசன் தனது 29 –ஆம் அகவையில் பழனி அம்மையாரை மணந்தார்.
1921 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிதாசனின்
தலைமகள் சரசுவதி பிறந்தார். அதே மாதத்தில் பாரதிதாசனின் மனதில் நிறைந்திருந்த
அவரது குரு பாரதியாரும் மறைந்தார் !
எழுத்துப் பணி:
பாடல்கள், கட்டுரைகள், கதைகள் எழுதி, நாளிதழ், கிழமையிதழ், திங்களிதழ்களில் வெளியிடும் பணியில் 1922
–ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் தன்னை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டார் !
பகுத்தறிவாளர்:
பெரியார் ஈ.வெ.இரா. அவர்களின் தன்மான இயக்கத்தில் (சுயமரியாதை) 1928
-ஆம் ஆண்டு முதல் இணைந்து பகுத்தறிவுக்
கொள்களைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார் ! குடும்பத் திருமணங்களில் தாலி
அணிவித்தலைத் தவிர்க்கலானார் !
நூல்கள் வெளியீடு:
பாரதியார் புதுவைக்கு வருவதற்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர்
சிறுமியர் தேசிய கீதம், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு, சஞ்சீவி
பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
ஆகியவற்றை 1930 -ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளியிட்டார் ! பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி 1938 ஆம்- ஆண்டு வெளியானது !
திரையுலகத் தொடர்பு:
கவி காளமேகம் என்னும் திரைப்படத்திற்கு 1939 ஆம் ஆண்டு கதை, உரையாடல், பாடல்களை எழுதியதன் மூலம் திரையுலகத் தொடர்பு முதன்முதலில்
பாரதிதாசனுக்கு ஏற்பட்டது ! தனது தமிழ் வேட்கைக்கு வித்தாகக் கருதிய பாரதியாரின்
வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம்
கொண்டிருந்தார். ஆனால் அவரது ஆசை இறுதி வரை நிறைவேறவே இல்லை !
இலக்கிய வாழ்வு:
பாரதிதாசனின் இலக்கிய வாழ்வில் 1941 ஆம் ஆண்டு முதல் ஏற்றம் நிகழ்ந்தது. “எதிர்பாராத முத்தம்”, ”குடும்ப விளக்கு”,
பாண்டியன் பரிசு”, “இருண்ட வீடு”, “காதல் நினைவுகள்’, ”நல்ல தீர்ப்பு”, “அழகின் சிரிப்பு” “தமிழியக்கம்”, “எது இசை”, ஆகிய பல காவியங்கள் வெளியிடப்பட்டன !
புரட்சிக் கவிஞர்:
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் 1946 –ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு
விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ”புரட்சிக்
கவிஞர்” என்னும் பட்டத்தைப்
பாரதிதாசனுக்கு அளித்து, உருபா 25,000 அடங்கிய பொற்கிழியையும் அளித்தார்
! தமிழாசிரியர் பணியில் இருந்து கொண்டே
இத்துணை இலக்கியப் பணிகளையும் ஆற்றிய
பாரதிதாசன் 8-11-1946 அன்று ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு
பெற்றார் !
படைப்புகள்:
பாரதிதாசனின் படைப்புகள் ஏராளம் ! ஏராளம் ! ”காதலா? கடமையா ?”, ”முல்லைக்காடு”, “படித்த பெண்கள்”, குடும்ப விளக்கு I, II, III, IV, V தொகுதிகள், ”சேர தாண்டவம்”, “தமிழச்சியின் கத்தி”, “ஏற்றப்பாட்டு”,
“அமிழ்து எது?”, “கழைக்கூத்தியின் காதல்”, “இசையமுது”,
”பொங்கல் வாழ்த்துக் குவியல்”, ”தேனருவி”, “தாயின் மேல் ஆணை”, இளைஞர் இலக்கியம்”, “குறிஞ்சித் திரட்டு”, “பிசிராந்தையார்”, “கண்ணகி புரட்சிக் காப்பியம்”, “மணிமேகலை வெண்பா”, “பன்மணித் திரள்”, இன்னும் எத்துணையோ உள !
மறைவு:
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !”
என்று உரத்துக் குரல் கொடுத்த பாரதிதாசனின்
குரல் 1964 –ஆம் ஆண்டு அடங்கிப்போயிற்று ! ஆம் !
பாரதிதாசன், 1964 –ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 –ஆம் நாள் தமிழ்கூறும் நல்லுலகைத் தாளாத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு
நிலமகளிடம் அடைக்கலமானார். “செங்குருதி தனிற் கமழ்ந்து வீரம்
செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் !” என்று பரணி
பாடிய பாவலனின் இறுதி மூச்சு புதுவையில் அடங்கிப் போயிற்று ! அவர் இப்பூவுலகில்
வாழ்ந்த காலம் 72 ஆண்டு, 11 மாதம், 28 நாள் !
“தமிழுக்கும் அமுதென்று பேர் ! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ! தமிழுக்கு
நிலவென்று பேர் ! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின்
விளைவுக்கு நீர் ! தமிழுக்கு மணமென்று பேர் ! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் ! தமிழுக்கு மது
வென்று பேர் ! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்
பயிருக்கு வேர் ! “ என்று தமிழிசையைப் உரத்துப் பாடிப்
பறந்த புதுவைக் குயில் சுற்றிச் சுழன்றடித்த இறப்பு என்னும் காற்று வெளியிடையே
கரைந்து போயிற்று !
பைந்தமிழ்த் தேர்ப் பாகன் ! – அவனொரு
செந்தமிழ்த் தேனீ ! சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம்பாட வந்த மறவன் ! புதிய
அறம்பாட வந்த அறிஞன் ! நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
என்னென்று சொல்வேன் ! என்னென்று சொல்வேன்!
பாரதியைப் பற்றிப் பாரதிதாசன் பாடிய இந்த வரிகள், பாரதிதாசனுக்கும் பொருந்தும் ! பாரதி உயிரோடு இருந்திருந்தால்,
அவரும் பாரதிதாசனைப் பற்றி இப்படித்தான்
பாடியிருப்பார் !
முடிவுரை:
பாரதியை இழந்தோம் ! பாரதிதாசனையும் இழந்தோம் ! அவர்கள் ஊட்டிய தமிழ் உணர்வையும் இழந்தோம் ! விழிப்பின்மையால் நமது தமிழையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
25]
{08-05-2022}
-------------------------------------------------------------------------------------
பாரதிதாசன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக