தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 30 ஏப்ரல், 2022

(13) நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை - வரலாறு !

தோற்றம்:

 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை 1888 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 –ஆம் நாள், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். தந்தை பெயர் வெங்கட்ராமன் பிள்ளை. தாயார் அம்மணியம்மாள் !

 

தந்தை வெகட்ராமன் பிள்ளை காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். வெங்கட்ராமன் அம்மணியம்மாள் இணையருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு எட்டாவதாகப் பிறந்தவர் இராமலிங்கம். மறவனப்பு (இதிகாசம்), தொன்ம(புராணம்)க் கதைகளையெல்லாம் தன் மகனுக்குச் சொல்லி, அறம் தவறாமல் வாழவேண்டும் என்று இராமலிங்கத்தை வளர்த்தவர் தாயார் !

 

கல்வி:

 

இராமலிங்கம் நாமக்கல்லில் உள்ள நம்மாழ்வார் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது, கோயம்புத்தூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியொன்றில் 6 -ஆம் படிவம் வரை (OLD S.S.L.C.)  பயின்றார். தனது கல்லூரிப் படிப்பைத் திருச்சியில் மேற்கொண்டார் !

 

திருமணம்:

 

இராமலிங்கம், தனது அத்தை மகள் முத்தம்மாளை 1909 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ! இராமலிங்கம் பிள்ளையின் மனைவி முத்தம்மாள் 1924 -ஆம் ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, அவரது தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன

 

ஆசிரியப்பணி:

 

இராமலிங்கம், சிறிது காலம் ஆசிரியராகப்  பணியாற்றினார். ஆனால் அதில் நிலைத்து நீடிக்க முடியவில்லை. பின்பு வேறு சில பணிகளில் அமர்ந்தார். ஒன்றிலும் நிலைத்து இருக்க முடியவில்லை !

 

ஓவியக் கலைஞர்:

 

இயற்கையிலேயே ஓவியக் கலை மீது நாட்டமும் திறமையும் கொண்டிருந்த இராமலிங்கத்திற்கு, இவரது ஆசிரியராக இருந்த எலியட் என்பவர் உதவி செய்து, இவரது படைப்புகளை வெளிக்கொணரச் செய்தார். இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலை போயின ! இவர் வரைந்த ஐந்தாம் சார்சு மன்னரின் ஓவியத்தைப் பாராட்டி, 1912 -ஆம் ஆண்டு மன்னர் குடும்பம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துப் பெருமைப்படுத்தியது !

 

கவிஞராக மலர்வு:

 

இராமலிங்கம் பிள்ளைக்குக் கவிதை எழுதும் ஆற்றல் மிகுதியாக இருந்தது. 1930 -ஆம் ஆண்டு உப்பு அள்ளும் அறப்போருக்காக இவர் எழுதிய கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுதுஎன்னும் பாடல் இவரைத் தமிழகமெங்கும் அறிமுகப்படுத்திப் புகழ் சேர்த்தது. இவர் எழுதிய பாடல்கள் சங்கு கணேசன் என்பவரின் சுதந்திரச் சங்குஇதழில் தொடர்ந்து வெளிவந்தது !

 

அரசியல் ஈடுபாடு:

 

இராமலிங்கம் பிள்ளைக்கு 1906 -ஆம் ஆண்டு முதல் நாட்டு விடுதலையில் வேட்கை பிறந்தது. கரூரில் தனது தமக்கை வீட்டில் தங்கி இருக்கையில் காங்கிரசு இயக்கத்தில் முனைப்பாக ஈடுபடலானார் !

 

1914 -ஆம் ஆண்டு திருச்சி மாவட்டக் காங்கிரசின் செயலாளராகப் பணிபுரிந்தார். கரூர் வட்டக் காங்கிரசுத் தலைவராகவும் செயலாற்றினார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் நகரக் காங்கிரசின் தலைவராக இருந்தார் !

 

நூல்கள் வெளியீடு:

 

தேவகோட்டை சின்ன அண்ணாமலை என்பவரின்  புத்தக வெளியீட்டு நிறுவனம் மூலம் இராமலிங்கனாரின் நூல்கள் பதிப்பிக்கப் பெற்று வெளியாகின. இவரது கவிதைத் தொகுதிகள் நாட்டு விடுதலை வேட்கையில் திளைத்திருந்த பொதுமக்களிடையே நன்கு வரவேற்பைப் பெற்றன !

 

போராட்டமும் சிறை வாழ்வும்:

 

நாட்டு விடுதலைப் போராட்டத்தின் விளைவாக 1932 -ஆம் ஆண்டு இராமலிங்கம் பிள்ளைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. 1945 -ஆம் ஆண்டு இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராசர், திரு.வி.க., பி.இராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர் !

 

மலைக்கள்ளன் நெடுங்கதை:

 

இராமலிங்கம் பிள்ளை எழுதிய நெடுங்கதையான மலைக்கள்ளன்,” ம.கோ.இராமச்சந்திரன் (M.G.R.), பி.பானுமதி நடிப்பில் திரைப்படமாக வெளியாகி இவரைத் தமிழ் நாடெங்கும் அறிந்த ஆளிநராக உயரத்திற்குக் கொண்டு சென்றது !

 

பன்முகச் செம்மல்:

 

இராமலிங்கம் பிள்ளை, கவிஞர், எழுத்தாளர், இதழாளர், விடுதலை வீர்ர், குமுகாயச் சீர்திருத்தச் செம்மல் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு”, ”தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”, ”கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள், கவலை உனக்கிலை ஒத்துக்கொள்போன்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக் காரர் !

 

படைப்புகள்:

 

இராமலிங்கம் பிள்ளையின் படைப்புகள் பலப்பல. இசைப் புதினங்கள் - 3., கட்டுரைத் தொகுதிகள் – 12., தன் வரலாறு – 3., புதினங்கள் – 5., இலக்கியத் திறனாய்வு நூல்கள் – 7., கவிதைத் தொகுப்புகள் – 10., சிறு காப்பியங்கள் – 5., மொழிபெயர்ப்புகள் – 4., எனப் பட்டியல் நீள்கிறது !

 

இவர் எழுதிய நூல்கள் மலைக்கள்ளன் (புதினம்), காணாமாற் போன கல்யாணப் பெண் (புதினம்), பிரார்த்தனை (கவிதை), நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறளும் பரிமேலழகரும், என் கதை (தன் வரலாறு), அவனும் அவளும் (கவிதை), சங்கொலி (கவிதை), மாமன் மகள் (நாடகம்), அரவணை சுந்தரம் (நாடகம்) இன்னும் பல !

 

அரசவைக் கலைஞர்:

 

கவிஞரின் நாட்டுப் பற்றையும், தமிழ்ப் புலமையையும் பாராட்டும் வகையில், நாட்டு விடுதலைக்குப் பிறகு, தமிழ்நாடு மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், இருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் அமர்த்தம் செய்து பெருமைப்படுத்தியது !

 

நினைவாலயம்:

 

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னைத் தலைமைச் செயலகத்தின்  பத்து மாடிக் கட்டடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகைஎனப்  பெயர் சூட்டி  அவரைப் பெருமைப் படுத்தினார் ! நாமக்கல் நகரில், உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு கவிஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !

 

மறைவு:

 

பல பெருமைகளுக்குச் சொந்தக் காரரான நாமக்கல் கவிஞர் 1972 ஆம்  ஆண்டு, ஆகத்து 24 ஆம் நாள், தமது 84 ஆம் அகவையில்  தான் பற்றுக் கொண்டிருந்த தமிழையும், தமிழர்களையும், தமிழகத்தையும் மீளாத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்து போனார் !

 

முடிவுரை:

 

தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !என்னும் எழுச்சிப் பாடலை நமக்களித்த வண்ணப்பறவை வானில் பறந்து எங்கோ மறைந்து போயிற்று !. அவர் விதைத்த வரிகள் இன்னும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன; ஆனால் நாம் எப்போது தலைநிமிர்ந்து நிற்கப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை ?

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ் அறிஞர்கள்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

-------------------------------------------------------------------------------------

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக